கோயம்புத்தூரில் உள்ள உக்கடத்தில் தீபாவளிக்கு முந்தைய நாள் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று தங்களது விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.


இந்த நிலையில், கோவையில் கார் வெடித்து சிதறிய விவகாரம் தொடர்பாக சென்னை, தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் உளவுத்துறை டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதமும் பங்கேற்றுள்ளார். இந்த ஆலோசனையில் கோவை கார் வெடித்து சிதறிய விவகாரம் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.




முன்னதாக, கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. கார் முழுவதும் தீயில் எரிந்து கருகியதில், காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். சத்தம் கேட்டு வந்த பொது மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.


போலீசார் விசாரணையில், காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், அவர் பழைய துணி விற்பனை செய்யும் வேலை பார்த்து வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. 2019 ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தியுள்ளனர்.




ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க தேவையான பொருட்கள் கைப்பற்றினர்.


இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்தனர். இவர்கள் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


இந்த சம்பவத்தை தொடர்ந்து கோயம்புத்தூர் முழுவதும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.