மதிமுக நிறுவனர் வைகோவுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று வலது தோள்பட்டையில் சிறிய அறிவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை திருநெல்வேலியில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்ததில் வைகோவுக்கு வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
வைகோவின் உடல்நலம் குறித்து விசாரித்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நன்றி என வைகோவின் மகனும், மதிமுக பொது செயலாளருமான துரை வைகோ அறிக்கை வெளியிட்டிருந்தார். தொடர்ந்து தனது தந்தை நலமுடன் இருப்பதாக வைகோ பேசுவது போன்ற வீடியோவையும் துரை வைகோ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மறுமலர்ச்சி சொந்தங்களே வணக்கம். இன்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ள நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் தனது உடல்நிலை குறித்து தமிழ் பெருமக்களுக்கு விளக்கியும், அவர் நலனை விழையும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி பாராட்டியும் காணொளியில் நேற்று இரவு பேசி வெளியிட்டுள்ளார்கள்.” என பதிவிட்டுள்ளார்.
அதில், ”நான் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். தமிழ்நாட்டிற்கு மேலும் சேவை செய்ய காத்திருக்கிறேன். பரிபூரண ஆரோக்கியத்தோடு மீண்டு வருவேன்” என இன்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ள நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து வைகோ தனது உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய வைகோ, ”அன்புள்ளம் கொண்ட தமிழ் பெருமக்களே! தமிழ்நாட்டில் பொது ஊழியம் செய்கின்ற ஒரு சாதாரண தொண்டனாகிய இந்த வைகோ, ஏறத்தாழ 7000 கிலோ மீட்டர் நடந்து இருக்கிறேன். ஆனால், நான் கீழே விழுந்தது இல்லை. இப்போது நான்கு நாட்களுக்கு முன்னர், நெல்லைக்கு சென்றிருந்த இடத்தில் என் வீட்டில் படிகளின் வழியாக ஏறாமல், பக்கத்தில் இருந்த திண்ணை வழியாக ஏறினேன். அப்போது என்னையும் அறியாது இடது புறம் சாய்ந்து விட்டேன். எனக்கு தலையில் அடிபட்டிருந்தாலோ, முதுகில் அடிபட்டிருந்தாலோ இயங்க முடியாமல் போயிருப்பேன். நல்லவேளையாக இடது தோள்பட்டையில் உள்ள கிண்ணம் (மூட்டு) உடைந்திருக்கிறது. அதோடு எலும்பும் கீறி இருக்கிறது. இதையடுத்து, மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் சென்னைக்கு வந்து அறுவை சிகிச்சை செய்யவுள்ளேன்.
ஆகவே, நான் நன்றாக இருக்கிறேன். முழு ஆரோக்கியத்துடன் வருவேன். முன்புபோல், இயங்க முடியுமா என்பதில் யாரும் சந்தேகிக்க வேண்டும். நான் உழைப்புக்கு பெயர்போனவன் என்று கலைஞரே சொல்லியிருக்கிறார். தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டியதை செய்ய, பரிபூரண ஆரோக்கியத்தோடு மீண்டு வருவேன்” என்று தெரிவித்துள்ளார்.