தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளுடைய பதவிக்காலம் முடிவடைந்தும் நீண்ட காலம் அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த சூழலில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுமென தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணிகள் அரசியல் கட்சிகளிடம் இறுதியாகிவிட்ட நிலையில், அந்தந்த கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கத் தொடங்கிவிட்டன.



 

இந்தத் தேர்தலில் கூட்டணியில் பல கட்சிகள் இருந்தாலும் பெரும்பகுதி இடங்களில் நிற்க தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான தி.மு.கவும், முன்னர் ஆண்ட கட்சியான அ.தி.மு.கவும் முடிவு செய்திருக்கின்றன. அதன் விளைவாக கூட்டணி கட்சியினருக்கு சொற்ப இடங்களை ஒதுக்கிவருகின்றன. இந்த நிலையில் கூட்டணியே இல்லாமல் தனித்து பல கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கின்றன. இந்நிலையில் மாட்டுவண்டியில் கையில் கரும்புகளை ஏந்தி நூதன முறையில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சியினர் கவனத்தை ஈர்த்தனர்.



 


 

சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் உள்ள உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றுவரும் நிலையில் கடந்த மூன்று நாட்களாக ஒருவர் கூட மனு தாக்கல் செய்யாத சமயத்தில் நேற்று அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க மற்றும் தி.மு.கவில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் சுயேட்சையாக வந்து தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்கள் நூதன முறையில் மாட்டு வண்டியில் கையில் கரும்புகளை ஏந்தி நகரில் ஊர்வலமாக வந்து தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். கடந்த சில நாட்களாக ஆரவரமின்றி காணப்பட்ட நகராட்சி அலுவலகம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய அதிகமானோர் வந்த நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தம்பிகள் கரும்புடன் வந்தது கவனத்தை ஈர்த்துள்ளது.