தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று டெல்லியில் ஒன்றிய ஜல் சக்தி துறையின் அமைச்சர் C.R. பாட்டீல் அவர்களையும், ஒன்றிய ஜல் சக்தி துறையின் இணை அமைச்சர்கள் சோமண்ணா, மற்றும் ராஜ் பூஷன் சௌத்திரி அவர்களையும் சந்தித்து தமிழ்நாட்டின் பன்மாநில நதிநீர் பிரச்சினைகள், நதிநீர் இணைப்பு திட்டங்களை செயல்படுத்துதல், பாசன கட்டமைப்புகளை சீரமைக்கும் திட்டங்களுக்கு நிதியுதவி பெறுதல் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினார்கள்.
காவிரி பிரச்சனை
கர்நாடகா காவிரி நீரை தமிழ் நாட்டிற்கு மாதாந்திர அட்டவணைப் படி அளிப்பது குறித்து மாண்பமை உச்சநீதி மன்றம் 16.02.2018 அன்று அளித்த தீர்ப்பின்படி மாதவாரியாக பில்லிகுண்டுலுவில் நீரை அளிக்க அறிவுறுத்துமாறு கோரப்பட்டது.
மேகதாது அணை திட்டம்:
கர்நாடகா உத்தேசித்துள்ள மேகதாது திட்டம் தமிழ் நாட்டிற்கு பாதிப்பை விளைவிக்கும். என்பதால் அதற்கு ஒருபோதும் அனுமதி அளிக்கக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் காவிரி படுகையில் நீர்பற்றாகுறை காலங்களில் விகிதாசாரத்தின் படி நீரை பங்கீடு செய்ய அறிவியல் பூர்வ விதிமுறையை (formula வை) நிர்ணயிக்க ஆணையத்தை வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
வெண்ணாறு பாசன கட்டமைப்பை நவீனப்படுத்துதல் திட்டம்-2
காவிரியின் கிளை நதியான வெண்ணாற்றின் உபபடுகையில் உள்ள LIITF 601 கட்டமைப்பை நவீனப்படுத்தும் இரண்டாம் கட்ட திட்டத்தினை செயல்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கியின் (Asian Development Bank) நிதியுதவியை பெற தேவையான ஒன்றிய அரசின் ஒப்புதல்களை பெற மத்திய நீர்வள குழும்ம் (CWC) மற்றும் ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகமும் அவைகளின் ஒப்புதல்களை உடனே அளிக்க வேண்டப்பட்டது.
கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம்
தேசிய நீர்வள மேம்பாட்டு முகமை (NWDA) தயாரித்துள்ள கோதாவரி - கிருஷ்ணா பெண்ணார் காவிரி இணைப்புக் கால்வாய் திட்டம் தென்மாநிலங்களின் நீர்வளத்தை பெருக்கும் ஒரு முக்கியமான திட்டமாகும்.
இத்திட்டத்தை உடன் செயல்படுத்த ஒன்றிய அரசின் நீர்வள அமைச்சகம் மற்றும் தேசிய நீர்வள மேம்பாட்டு முகமை (NWDA), தேவையான அனைத்து நடவடிக்கைகளை தாழ்த்தாமல் எடுக்க வேண்டப்பட்டது.
உள்ளிட்ட தமிழ்நாட்டிற்கு தேவையான பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு ஆவணங்களை மத்திய அமைச்சரிடம் தமிழ்நாடு நீர்வழித்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியது..
காவிரியில் தடையின்றி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வலிவுறுத்தியுள்ளோம், காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கவும் வலியுறுத்தி உள்ளோம். மேகதாதுவில் அணை கட்ட ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளோம் என கூறினார்.
மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ள மாதாந்திர அட்டவணைப்படி தமிழ்நாட்டுக்கு எந்த ஆண்டும் கர்நாடகா தண்ணீர் வழங்கியது கிடையாது என குற்றம்சாட்டினார். காவிரியில் தடையின்றி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
குறிப்பாக காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கவும் வலியுறுத்தி உள்ளோம். எங்கள் கோரிக்கைகளை கேட்டுவிட்டு அவர் இந்தியில் பதிலளித்ததால் எங்களுக்கு பேசியது எதுவும் புரியவில்லை. மத்திய அமைச்சர் அதிகமாக அச்சா, அச்சா என்று பேசினார். இருந்தாலும் எங்கள் செயலாளர் விளக்கி சொன்னார் என தெரிவித்தார்.