புதுச்சேரி: புதுச்சேரி - கடலூர் சாலையில் ரூ. 650 கோடியில் மேம்பாலம் நான்குவழி சாலை பணிகள் துவங்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார்.

Continues below advertisement

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலுக்கு முடிவு

புதுச்சேரியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண இந்திராகாந்தி  சதுக்கம் முதல் ராஜீவ்காந்தி சதுக்கம் வரையில், 3.877 கிலோமீட்டர் நீளத்திற்கு உயர்மட்ட பாலம் ரூ.436 கோடியில் அமைக்கப்படுகிறது. மேலும், ரூ.25.05 கோடியில் 13.63 கி.மீட்டருக்கு கிழக்கு கடற்கரை சாலை மேம்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுவிழா, புதுச்சேரி தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் நேற்று மதியம் நடைபெற்றது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, உயர்மட்ட பாலம் பணிக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது, விழுப்புரம்- நாகை நான்கு வழிச்சாலையில், பணிகள் முடிக்கப்பட்ட புதுச்சேரி முதல் பூண்டியாங்குப்பம் வரையிலான 38 கிலோமீட்டர் சாலையை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

Continues below advertisement

புதுச்சேரி - கடலூர் சாலையில் உயர்த்தப்பட்ட வழித்தடம்

இவ்விழாவில் ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் பேசுகையில், புதுச்சேரி - கடலூர் சாலையில் மரப்பாலம் முதல் முள்ளோடை வரை உயர்த்தப்பட்ட வழித்தடம் அமைக்க கோரிக்கை வைத்தனர். மேலும், மாநிலத்திற்கு புதிய சாலைத் திட்டங்கள் கேட்டு முதலமைச்சர் ரங்கசாமி மனு அளித்தார். இந்த கோரிக்கையை உடனடியாக ஏற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மேடையிலேயே அதற்கான அறிவிப்பை வெளியிட்டு, கூறுகையில், புதுச்சேரி மரப்பாலம் முதல் அரியாங்குப்பம் வரையில் உயர்மட்ட பாலமும், அங்கிருந்து முள்ளோடை வரை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய ரூ.650 கோடி மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

16.5 கிலோமீட்டர் தூரம் பயண நேரம் குறையும்

இந்நிலையில், புதுச்சேரி இந்திராகாந்தி சிக்னல் நடேசன் நகரில் இருந்து முள்ளோடை வரையில், நான்கு வழிச்சாலை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற புதுச்சேரி அரசின் கோரிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்று கொள்கிறது. இது புதுச்சேரி முதல் கடலுார் வரையிலான 16.5 கிலோமீட்டர் தூரம் பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும். நடேசன் நகரில் இருந்து முள்ளோடை வரையிலான புதிய சாலை வழித்தடத்தை நிர்மாணிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை அமைச்சகம் தயாரிக்கும். வரும் 2026ம் ஆண்டின் துவக்கத்தில் கட்டுமானப் பணிகளை துவங்குவோம்.

ரூ. 2,200 கோடி மதிப்பில் டெண்டர்

மரக்காணம் - புதுச்சேரி நெடுஞ்சாலையை நான்கு வழிப்பாதையாக மாற்ற ரூ. 2,200 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் வழங்கப்படும். யூனியன் பிரதேசத்தில் சிறு பாலங்கள் கட்டுவதற்கு ரூ. 100 கோடி செலவிடவும் அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் கூறினார்.

நிதின் கட்கரி காட்டம்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், புதுச்சேரியில் இருந்து மேம்பாலம்  கோரிக்கை வந்ததும், இது நமது அதிகாரத்திற்குட்பட்டது இல்லை. அவர்களே செய்து கொள்ளட்டும் என அதிகார மைய அதிகாரிகள் தெரிவித்தனர். புதுச்சேரி என்ன பாகிஸ்தானிலா உள்ளது. அதுவும் இந்தியாவில் தானே இருக்கிறது. சிறிய மாநிலமான புதுச்சேரியால் இவ்வளவு பெரிய திட்டங்களை நிறைவேற்றுவது கடினம். எனவே நாமே செய்து கொடுப்போம் என்று உத்தரவிட்டேன் என பேசினார்.