பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கடந்த 9 ஆண்டுகள் பாஜக செய்த சாதனையை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்கிறார். இந்த நடைப்பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமநாதபுரத்தில் தொங்கி வைத்தார். இதில், அதிமுக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து இன்று காலை சுமார் 5.30 மணிக்கு ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உடன் சென்று சாமி தரிசனம் செய்தனர். காலை 10.30 மணி அளவில் எர்காடு கிராமத்தில் இருக்கும் கட்சி நிர்வாகியின் வீட்டிற்கு சென்று பார்வையிடுகிறார். பின் அவர் தங்கி இருக்கும் விடுதிக்கு திரும்புகிறார். பின்னர் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் குறித்த “ கலாம் நினைவுகள் இறப்பதில்லை” என்ற புத்தகத்தை வெளியிடுகிறார். அதனை தொடர்ந்து கலாமின் வீட்டிற்கு சென்று உறவினர்களை சந்தித்து பேசுகிறார்.
மதியம் 12.30 மணியளவில் பாம்பன் குந்துகால் பகுதியில் இருக்கும் விவேகானந்தர் மணிமண்டபத்தை பார்வையிடுகிறார். அதை தொடர்ந்து அவர் மதுரை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.
நேற்றைய தினம் அண்ணாமலையின் நடைப்பயண தொடக்க விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை ஒழிப்பதற்கான பயணம்தான் இது. தமிழ்நாட்டை ஊழலில் இருந்து விடுவிப்பதற்கான ஒரு பயணம் தான் இது. தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கை சீர்படுத்துவதற்கான பயணம் இது. ஊழல்வாதிகளை ஒழித்து ஏழை மக்களின் நலத்தினை பேணும் ஒரு அரசினை உருவாக்குவதற்கான பயணம் தான் இது” என குறிப்பிட்டார்.
மேலும், “மோடி கடந்த 9 ஆண்டுகளில் சாதிவாதம், குடும்ப ஆட்சி மற்றும் ஊழல் ஆட்சிக்கு எதிராக தனது பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் கூட்டணியான பழைய UPA கூட்டணி 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு, தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் மக்களிடத்திலே வாக்கு கேட்டு செல்லும்போது உங்களுடைய 2 ஜி ஊழலும், காமன்வெல்த் ஊழலும் தான் அவர்களுக்கு நினைவில் வரும். எப்போதெல்லாம் நீங்கள் மக்களிடத்திலே வாக்கு சேகரிக்க செல்கிறீர்களோ அப்போதெல்லாம், நீங்கள் கரியில் செய்த ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், இஸ்ரோவில் செய்த ஊழல் ஆகியவை தான் அவர்களுக்கு நியாபகம் வரும். இந்த எதிர்க்கட்சிகள் கூட்டணி தான், அரசியலமைப்பு சட்டதிருத்தம் 370-ஐ நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.” என்றார்