Marakkanam To Puducherry 4 Lane: மரக்காணம் தொடங்கி புதுச்சேரி வரையிலான 4 வழிச்சாலை அமைக்க 2 ஆயிரத்து 157 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மரக்காணம் டூ புதுச்சேரி 4 வழிச்சாலை:
பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான குழு வெள்ளிக்கிழமை கூடியது. அதன் முடிவில், கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணம் பகுதியில் இருந்து புதுச்சேரி வரையிலான, 4 வழிசாலை அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையானது போக்குவரத்தை கட்டுப்படுத்த 34.7 கி.மீ நீளமுள்ள பசுமைப் பாதை, அணுகல் கட்டுப்பாட்டில் உள்ள புதுச்சேரி புறவழிச்சாலையைக் கொண்டிருக்கும். தொடர்ந்து அதிகரித்து வரும் தேவை காரணமாக சாலையை விரிவாக்கம் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்படும் சாலையில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும்.
ரூ.2,157 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை - புதுச்சேரி - நாகப்பட்டினர் - கன்னியாகுமரி பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியாக, இந்த மரக்காணம் - புதுச்சேரி நான்கு வழி சாலை திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கான செலவாக 2 ஆயிரத்து 157 கோடி ரூபாய் கணிக்கப்பட்டுள்ளது. திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தலுக்கு 442 கோடி ரூபாய் செலவாகும் என்றும், மொத்த சிவில் செலவு ஆயிரத்து 118 கோடி ரூபாய் வரை செலவாகலாம் என்றும் அரசு தரப்பில் கணக்கிடப்பட்டுள்ளது. திட்டம் முடிவடையும்போது நாள் ஒன்றிற்கு 17 ஆயிரத்து 800 பயணிகள் காரை இந்த சாலை கையாளும் என கூறப்படுகிறது. வேகமானதாகவும், பாதுகாப்பானதாகவும் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை சாலை பகுதிக்கான திறமையான இணைப்பாகவும் இந்த சாலை மாற உள்ளது.
அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்:
தற்போதுள்ள கட்டுமான வசதிகளின்படி, சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், மற்றும் நாகப்பட்டினம் இடையேயான இணைப்பானது, இருவழி அகல தேசிய நெடுஞ்சாலை 332A மற்றும் மாநில நெடுஞ்சாலைகளையே சார்ந்துள்ளது. அதிகப்படியான போக்குவரத்து காரணமாக இந்த சாலைகளில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக வழித்தடத்தில் உள்ள அதிக மக்கள் உள்ள பகுதிகள் மற்றும் நகரங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.
தீர்வாகும் புதிய 4 வழிச்சாலை:
மரக்காணம் தொடங்கி புதுச்சேரி வரையிலான புதிய தேசிய நெடுஞ்சாலை ஆனது, நான்கு பிரதான சாலைகளை ஒருங்கிணைக்கிறது. அதன்படி, தேசிய நெடுஞ்சாலை 32 மற்றும் 332 உடன், மாநில நெடுஞ்சாலைகளான 136 மற்றும் 203 ஆகியவை ஒருங்கிணைக்கப்படுகின்றன. இதுபோக புதுச்சேரி மற்றும் சின்னபாபு சமுத்திரம் ஆக்கிய ரயில் நிலையங்களையும், சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் கடலூரில் உள்ள ஒரு சிறிய துறைமுகம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு முன்மாதிரி சாலை திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதிய 4 வழிச்சாலை மூலம் மரக்காணம் தொடங்கி புதுச்சேரி வரையிலான, கிழக்கு கடற்கரை சாலையின் 46 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 20 நிமிடங்களில் கடக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
திட்டத்தின் பலன்கள் என்னென்ன?
மேம்படுத்தப்படும் தேசிய நெடுஞ்சாலையானது பிரதான ஆன்மீக தளங்கள் மற்றும் வர்த்தக மையங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தி, பிராந்திய வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியின் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதோடு, வணிகம், தொழில்துறை மற்றும் மீன் வர்த்தகத்தையும் பெருக்கக் கூடும். குறிப்பாக மன்னகுள கோயில் மற்றும் பாரடைஸ் கடற்கரைக்கான அணுகலை எளிதாக்கும்,. திட்டத்தின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகளும் உருவாக உள்ளது.
நீண்ட காத்திருப்புக்கு முடிவு:
கிழக்கு கடற்கரையை சாலையை விரிவாக்கும் செய்யும் பணிகளானது நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாமல்லபுரம் முதல் புதுச்சேரி - விழுப்புரம் மார்க்கத்தில் உள்ள ஆழியூர் கிராமம் வரையிலான பகுதியில் மூன்று கட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன. 46 கிலோமீட்டர் தூரம் கொண்ட மரக்காணம் - ஆழியூர் இடையேயான பணிகளானது வனப்பகுதியில் உள்ள நிலத்தை கையகப்படுத்துவது போன்ற பிரச்னைகளால் தாமதமாகி வந்தது. இந்நிலையில் தான் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட்டு ஒரு வழியாக பணிகளை தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதேநேரம், சென்னை தொடங்கி குமரி வரையிலான பொருளாதார வழித்தடத்தின் பணிகளும் முழு வேகம் எடுத்துள்ளன. குறிப்பாக மாமல்லபுரம் தாண்டி புதுச்சேரி தொடங்கி நாகை வரையிலான பணிகள் பெரும்பாலும் முடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த 46 கிலோ மீட்டர் வழித்தடமும் பயன்பாட்டிற்கு வந்தால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.