2024 - 2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது பல அறிவிப்புகளை வெளியிட்டார். ஆந்திரா, பீகார் போன்ற கூட்டணி கட்சிகளின் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி திட்டங்களை வாரி வழங்கியுள்ளது இந்த மத்திய பட்ஜெட். 


ஆந்திராவுக்கு 15,000 கோடி, பீகாருக்கு 26,000 கோடி என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் அசாம், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 


ஆனால் ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் தமிழ், தமிழ் என முழங்கிய பாஜக அரசின் பட்ஜெட்டில் இந்த முறை அதுகுறித்த வாடையே இல்லாமல் இருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்ஜெட் அறிவிப்பிலும் சரி, அரசியல் மேடைகளிலும் சரி தமிழ் மீதான ஆர்வத்தை கொட்டும் மோடி அரசு தமிழ்நாடு என்ற மாநிலத்தை மறந்துள்ளது.  


அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் தமிழ் இலங்கியங்கள், திருக்குறள் உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெறும். ஆனால் தமிழ்நாடு, தமிழ் என்ற வார்த்தையே மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. பீகார், உத்தரகாண்ட், சிக்கிம், இமாச்சல் ஆகிய மாநிலங்களுக்கு மட்டுமே வெள்ள நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வெள்ள நிவாரணம் கோரிய போதும் அதுகுறித்து இடம் பெறவில்லை. 


மதுரையில் பிறந்த நிர்மலா சீதாராமன் ஒன்றரை மணிநேரம் பட்ஜெட் உரையை வாசித்தபோது அதில் தப்பி தவறிகூட தமிழ்நாடு என்ற வாசகத்தை உபயோகப்படுத்தவில்லை. 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை விடுவிக்க முதல்வர் வலியுறுத்தி இருந்தார். தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவு சாலை திட்டத்துக்கான ஒப்புதல் வழங்கவும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் மத்திய பட்ஜெட்டில் ஏமாற்றமே மிஞ்சியது. 


சென்னையில் இடண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்தும் மத்திய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.


இதனால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு நிதி ஒதுக்காததற்கு நாடாளுமன்ற்த்ஹ்டில் தமிழக எம்.பிக்கள் கண்டன முழக்கத்தை பதிவு செய்தனர். 


ஏழை மக்களுக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறாததற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன.