காங்கிரஸ் கட்சி முன்னாள் செயல்தலைவர் ராகுல் காந்தி, வருகின்ற திங்கட்கிழமை தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய "உங்களில் ஒருவன்" பாகம் I நூல் வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ள சென்னை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 28ம் தேதி மாலை 3:30 மணி அளவில் நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் இந்த விழா நடைபெறவுள்ளது.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தனது 23 வயது வரையிலான வாழ்க்கை அனுபவங்களை இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார். 1953 மார்ச் 1, பிறந்த தனத்தில் இருந்து, 1976 மார்ச் 1 அன்று மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டது வரையிலான வாழ்க்கைப் பயணங்களை, உங்களில் ஒருவன் முதல் பாகமாக எழுதியுள்ளார்.
இந்த வெளியீட்டு விழா, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், பீகார் மாநில எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதலமைசச்சர் உமர் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தேசியளவில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. முன்னதாக, தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் பாஜகவுக்கு எதிரான, காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்களை சந்திக்கத் தொடங்கினர். கடந்த 20ம் தேதி மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ தாக்ரேயை சந்தித்தார். அன்று மாலையே, தேசிய காங்கிரஸ் தலைவர் சரத் பவாரைச் சந்தித்து உரையாடினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " தேசியவளில் பாஜகவுக்கு எதிரான கூட்டனியை உருவாக்குவது இன்றியமையாகிறது. காங்கிரஸ் இல்லாமல் இது சாத்தியமா? என்று கேட்கின்றனர். இப்போது தான் செயல்முறையைத் தொடங்கியுள்ளோம். நாட்கள் செல்ல செல்ல பதில் கிடைக்கும். பாஜக கருத்தியலுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட தலைவர்கள், பாஜக இல்லாத மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் விரைவில் நடத்தப்படும். சரத் பவாரின் சொந்த மாவாட்டத்தில் உள்ள பாராமதி நகரில் இதனை நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.
மறுமுனையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியும் காங்கிரஸ் அல்லாத , பாஜக எதிர்ப்புத் தலைவர்களைக் கொண்டு மூன்றாவது அணியைக் கட்டமைக்க ஆர்வம் காட்டி வருகிறார். முன்னதாக, மேற்குவங்க சட்டப்பேரவையை அம்மாநில ஆளுநர் முடக்கியது தொடப்ராக மம்தாவுடன் தொலைபேசியில் உரையாடி மு.க ஸ்டாலின், " மாநிலங்களின் உரிமையைக் காக்க திமுக எப்போதும் துணை நிற்கும். மாநில சுயாட்சியை காக்க திமுக போராடும். எதிர்க்கட்சிகளின் மாநாடு தில்லியில் விரைவில் நடக்கவுள்ளது" என்று குறிபிட்டார்.
இந்த சூழலில், ராகுல் காந்தியின் வருகை அரசியல் முக்கியதத்துவம் நிறைந்ததாக காணப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை முதன்மைப்படுத்தியிருப்பதன் மூலம், தேசிய அரசியலில் காங்கிரஸ் கட்சி தவிர்க்க இயலாலது என்ற கருத்தை மீண்டும் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை வைத்து தான் இதர கட்சிகள் அதனை மதிப்பீடு செய்ய இருக்கின்றன.
முன்னதாக, கூட்டாட்சி முறை மற்றும் சமூக நீதியை அடித்தளமாகக் கொண்ட ஒரு அகில இந்தியக் கூட்டமைப்பை தொடங்கப்போவதாக மு.க ஸ்டாலின் அறிவித்தார். அதில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர்கள் இருப்பார்கள் என்றும் குறிப்பிட்டார். இதன் மூலம், தேசிய அரசியலில் தனது விருப்பத்தை ஸ்டாலின் முதன்முறையாக வெளிப்படுத்தினார்.