'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறையின் கீழ், பெறப்பட்ட 4 இலட்சம் மனுக்களில் 70 ஆயிரம் மனுக்கள் TNeGA (மின் ஆளுமை இயக்குனரகம் ) வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அதில் 549 மனுக்களுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டிருகிறது" என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அனைத்து குடிமக்களுக்கும் அரசு சேவைகளை எளிய வகையிலும் வெளிப்படைத்தன்மையுடனும் வழங்க மின்-ஆளுமை இயக்குனரகம் உருவாக்கப்பட்டது . மேலும் மின்-ஆளுமைத் திட்டங்கள் மற்றும் சேவைகளுக்கு உறுதுணையாக இருந்து செயல்பட இது அமைக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கடந்த ஜனவரி மாதம் 29-ஆம் தேதி முதல் 234 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கிய “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற கலந்துரையாடல் சந்திப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார். ஒவ்வொரு சந்திப்பிலும், அத்தொகுதியைச் சேர்ந்த கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, பதிவு செய்யப்பட்டு, தனித்தனிப் பதிவு எண்கள் அடங்கிய ஒப்புகைச் சீட்டு பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டது. ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும், மக்களின் கோரிக்கை மனுக்கள் அடங்கிய பெட்டிகள் முதல்வர் ஸ்டாலின் முன்பாக பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டது.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. முதலமைச்சராகப் பதவியேற்றபின் தேர்தல் பரப்புரையின்போது தான் பெற்ற மனுக்களின் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கும் விதமாக ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்கிற சிறப்புத்துறையை முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்தினார். அவரது முதல்நாள் முதல் கையெழுத்தில் ஒரு அம்சமாக இந்தத் துறைக்கான சிறப்பு அதிகாரி நியமனமும் இருந்தது. தலைமைச் செயலகத்தில் சிறப்பு அலுவலகமாக இந்தத்துறை இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
யார் இந்த ஷில்பா பிராபகர்?
ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ், இணைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' ஆகிய துறைகளின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டார். இவர் முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் பணியாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. அவரது கண்காணிப்பில் தான் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஷில்பா பிரபாகர் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்தவர். 2009-ஆம் ஆண்டு பிரிவு இந்திய ஆட்சிப்பணி அதிகாரி. சட்டத்துறையில் பட்டப்படிப்பை முடித்தவர். யு.பி.எஸ்.சி. தேர்வில் பங்கேற்று 2009-ஆம் ஆண்டில் அகில இந்திய அளவில் 46-வது இடத்தைப் பெற்றவர். 2010-ஆம் ஆண்டில் திருச்சி மாவட்டத்தில் துணை ஆட்சியராகப் பணியைத் தொடங்கியவர், வேலூர் சார் ஆட்சியர், சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
2018-ஆம் ஆண்டு மே மாதம் திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியராகப் பணியில் அமர்ந்தார். பாளையங்கோட்டையிலுள் உள்ள அங்கன்வாடி மையத்தில் தனது மகளைச் சேர்த்து மாநிலத்துக்கே முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது கண்காணிப்பில் தான் இந்த மனுக்கள் மீதான தீர்வு பரிசீலனை நடைபெற்றது. குறுகிய காலத்தில் தனக்கு வழங்கப்பட்ட பணியை திருப்திகரமாக முடித்திருக்கிறார் ஷில்பா.