Vehicle Sticker : ஊடகத்தில் பணியாற்றுபவரின் பெயரில் வாகனம் இருந்தால், அவர் அந்த வண்டியில் ’ஊடகம்’ என்னும் ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்ளலாம்.


ஸ்டிக்கர்களை அகற்ற உத்தரவு:


PRESS, Police, Doctor, EB என துறைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை தனிநபர்கள் தங்கள் வாகனங்களில் ஒட்ட சென்னை போலீஸார் தடை விதித்தனர். வாகனங்களில் இதுபோன்ற குறியீடுகள் இடம் பெற்றிருந்தால், அவற்றை  மே 1ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் மே 2-ஆம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தது. 


அறிவிப்பின்படி, வாகனங்களில் ஊடகம், காவல்துறை, நீதித்துறை, வழக்கறிஞர், மருத்துவர் என அங்கீகாரமற்ற வகையில் ஸ்டிக்கர் ஒட்டுவதை கட்டுப்படுத்தும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 198 மற்றும் மத்திய மோட்டார் வாகன சட்டம் விதி 50-ன் கீழ் வரும் மே 2-ம் தேதி முதல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


அபராதம் எவ்வளவு?


அபராதம் விதிப்பது என்பது அனைத்து துறையினருக்கும் பொருந்தும். அதன்படி இந்த விதிமீறலைச் செய்துவிட்டு சிக்கிக் கொண்டால் அவர்களுக்கு முதல்முறை ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை ரூ. 1500 அபராதமாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமீறலில் ஈடுவோர் மீது மோட்டார் வாகன சட்டம் 1988-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் (மோட்டார் வாகனத்தில் அங்கீகரிக்கப்படாத குறியீடு) பிரிவு 198-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும். வாகன எண் தகட்டில் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை பயன்படுத்தினால் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சர்ச்சைகளும், காவல்துறை விளக்கமும்:


ஸ்டிக்கர்களை அகற்றுவது தொடர்பான அறிவிப்பில் பல்வேறு முரண்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த அறிவிப்பைத் திரும்பப்பெற வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தின. மேலும் சென்னை பத்திரிகையாளர் மன்றமும் சென்னை போக்குவரத்துக் காவல் துறையின் இந்த அறிவிப்புக்குக் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில்,  நம்பர் பிளேட்டில் எந்த வித சின்னங்களோ, துறையின் அடையாளங்களோ, பெயரோ எழுதக் கூடாது. அரசு அங்கீகரித்த எழுத்துக்களோடு எண்கள் மட்டுமே இடம் பெற்று இருக்கவேண்டும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.


ஊடகத்தில் பணியாற்றுபவரின் பெயரில் வாகனம் இருந்தால், அவர் அந்த வண்டியில் ’ஊடகம்’ என்னும் ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்ளலாம். ஆனால் வாகனம் வேறொரு பெயரில் இருந்து அதனை பயன்படுத்தி ஸ்டிக்கர் ஒட்டியிருந்தாலோ, உறவினர்கள் யாராவது ஊடகம் ஸ்டிக்கர் ஒட்டி வாகனத்தை பயன்படுத்தி வந்தாலோ, கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கமளித்துள்ளது.