தமிழ்நாட்டின் அரசியல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. காவிரி விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை உண்டாக்கியது.

Continues below advertisement

உதயநிதி ஸ்டாலின் கைது:

அவரது சர்ச்சை பேச்சு விஸ்வரூபம் எடுத்த அடுத்த நாளே உதயநிதி ஸ்டாலினை இன்று காவல்துறையினர் கைது செய்தனர். உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம் மொத்த தமிழ்நாட்டையும் பரபரப்பாக்கியது. கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து தஞ்சைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். உதயநிதி ஸ்டாலினுக்கு ஜாமின் வழங்கி அவரை விடுவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

உதயநிதி ஸ்டாலினுக்கு ஜாமின் வழங்கி அவரை விடுவிக்க கூறியதை திமுக-வினர் தங்கள் வெற்றியாக கருதினாலும், இதன் பின்னணியில் விஜய்யின் மறைமுக எச்சரிக்கை இருப்பதையே உணர முடிகிறது. தேர்தல் முடிவுகளுக்கு முன்பு வரை திமுக மற்றும் அதிமுக-வினர் தவெக-வை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. 

Continues below advertisement

தொடர்ந்து விமர்சனம்:

பெரும்பான்மை இல்லாத நிலையில் கூட்டணி ஆட்சியமைத்துள்ள தவெக அரசை தொடர்ந்து எதிர்க்கட்சியினர் விமர்சித்து வந்தனர். கொளத்தூரில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே தோற்றதால் தவெக மீது திமுக-வினர் மிகப்பெரிய ஆதங்கத்தில் உள்ளனர். ஆட்சியை பறிகொடுத்த திமுக-வின் முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி, அரசியல் செயல்பாடுகளை கடந்து அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பலரும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சித்து பேசியதால் அவரை கைது செய்தனர். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் முதலமைச்சரை மிரட்டும் வகையில் பேசியதற்காகவும் கைது செய்யப்பட்டார்.

மறைமுக எச்சரிக்கை:

திமுக-வினர் முதலமைச்சர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசி வருவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலினின் கைது நடவடிக்கை கருதப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினையே கைது செய்திருப்பதால் மற்றவர்கள் பேசினால் அவர்களுக்கும் இதே கதி என்பதை மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே இந்த கைது நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சித்த குதிரை பேர வழக்கில் ஏற்கனவே செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் ஜாமினில் உள்ளார். தனது ஆட்சியை கவிழ்ப்பதற்கான சதி நடவடிக்கை காரணமாகவும் முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சிகள் மீது கடும் ஆதங்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

திமுக-வினர் அதிர்ச்சி:

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டிருந்தாலும், திமுக-வினர் மத்தியில் இந்த கைது சற்று அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதனால், இனி வரும் நாட்களில் முதலமைச்சர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசினால் தங்கள் மீதும் சட்ட நடவடிக்கை பாயும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது.