'நாம வேலையை பார்ப்போம்' என 17 வார்த்தைகளில் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்ட ட்வீட் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றன. இதையடுத்து மே 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்போது உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவை உறுப்பினராகப் பொறுப்பேற்றார். அப்போதே அவர் அமைச்சராவார் என்று ஊகப் பட்டியல் வெளியானது. இதற்கு ஒருசேர எதிர்பார்ப்பும் எதிர்ப்பும் எழுந்தது. இது ஒருபுறமிருக்க,எம்.எல்.ஏ., சினிமா வெளியீடு, திமுக இளைஞரணி செயலாளர் என படு பிஸியாக இருக்கிறார் உதயநிதி. களத்தில் ஆக்டீவாக இருப்பதுபோலவே சோஷியல் மீடியாவிலும் ஆக்டீவாக இருப்பார் உதயநிதி.




தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து சினிமா, அரசியல் பதிவுகளையும், அப்டேட்களையும் கொடுக்கும் உதய், இன்று பதிவிட்ட 17 வார்த்தை பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், ''தயவு செய்து அரசியல் பிம்பங்களுக்கு பதில் சொல்லவோ, எதிர்வினையாற்றவோ வேண்டாம். அவற்றைப் புறக்கணித்துவிட்டு நம் வேலையைச் பார்ப்போம்’’ எனக் குறிப்பிட்டுள்ளார். ஏன்?எதற்கு? எனக் குறிப்பிடாமல் பொதுவான ஒரு அட்வைசாக இதனைக் குறிப்பிட்டுள்ளார் உதயநிதி. சோஷியல் மீடியாவில் திமுகவுக்கு எதிராக சிலர் தொடர்ந்து கருத்து பதிவிட்டும், வீடியோ பதிவிட்டும் வருவதாகவும் அதனைக் குறிப்பிட்டே இதனை உதயநிதி குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.






முன்னதாக உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுப்பட போவதாக தகவல்கள் வெளியாகின. அப்போது அறிக்கைவிடுத்த “ திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற கழக செயலாளர்கள் கூட்டங்களில் எனக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தலைமை கழகத்திற்கு அனுப்பி வைத்திருப்பது குறித்து அறிந்தேன். என் தொடர்பணிகள் மீதும், முன்னெடுப்புகள் மீதும் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் நான் என்றென்றும் நன்றிக்குரியவனாக இருப்பேன். கழகத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க அடுத்தகட்ட திட்டமிடல்களுடன் பாசறைக்கூட்டங்கள் நடத்துவது, நலத்திட்ட பணிகளில் ஈடுபடுவதென பலவற்றுக்குமான பயணங்களுக்கு தயாராகி வருகிறேன். இந்தச் சூழலில், என்மீதுள்ள அன்பின் காரணமாக, “எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். எந்த சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும என்பதை கழகமும் தலைமையும் நன்கறியும் என்பதை கழக உடன்பிறப்புகள் நாம் அனைவரும் அறிவோம் எனக் குறிப்பிட்டு இருந்தார்