விழுப்புரம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளின் சந்திப்புக் கூட்டத்தில் இன்று பங்கேற்றார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அப்போது பேசிய அவர், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவர் என்ன பேசினார் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

Continues below advertisement

“வாக்குரிமையை பறிப்பதே பாஜக அரசின் SIR திட்டம்“

விழுப்புரம் திமுக நிர்வாகிகள் மத்தியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், SIR என்று ஒரு திட்டத்தை கொண்டுவந்து, தேர்தல் ஆணையம் மூலம் நம் வாக்குரிமையை பாஜக அரசு பறிப்பதாக குற்றம்சாட்டினார். இந்த SIR திட்டத்தின் மூலம், பாஜகவிற்கு எதிராக இருக்கக்கூடிய, பாஜகவிற்கு எதிராக வாக்களிக்கக்கூடிய இஸ்லாமிய மக்கள், மகளிர், ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குரிமைகளை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்பதுதான் பாஜக அரசு கொண்டுவந்துள்ள எஸ்ஐஆர் திட்டத்தின் நோக்கம் என்று உதயநிதி விமர்சித்தார்.

“ஆர்எஸ்எஸ்-காரராகவே மாறிவிட்டாரா எடப்பாடி பழனிசாமி.?“

தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த அவர், இன்றைக்கு  அவர் அதிமுக-வில் இருக்கிறாரா.? இல்லை பாஜக-வில் இருக்கிறாரா.? அல்லது ஆர்எஸ்எஸ்-காரராகவே  மாறிவிட்டாரா என்பதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டு இருப்பதாக கூறினார்.

Continues below advertisement

மேலும், தற்போது அதிமுக-வை அமித்ஷா குத்தகைக்கு எடுத்துள்ளதாகக் கூறிய உதயநிதி, அதிமுக அவருடைய கட்டுப்பாட்டில் இருப்பதாக விமர்சித்தார். அதனால் தான் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு, அறிக்கை எல்லாமே அதிமுக அலுவலகத்தில் இருந்து வந்ததா அல்லது பாஜக அலுவலகத்தில் இருந்து வந்ததா என்று தெரியாத அளவிற்கு இருப்பதாக சாடினார். ஆனால், இப்படிப்பட்ட சூழ்ச்சிகளை எல்லாம் தாண்டியே இன்றைக்கு நம் தலைவர் தமிழ்நாட்டு அரசை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.

“கருப்பு சிவப்பு கரை வேட்டி கூட்டம் இருக்கும் வரை ஒன்றும் செய்ய முடியாது“

தொடர்ந்து பேசிய உதயநிதி, திருப்பரங்குன்றத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், தமிழ்நாட்டில் ஒரு மதக் கலவரத்தை ஏற்படுத்தி, எப்படியாவது உள்ளே நுழைந்துவிட முடியாதா என்று பல வழிகளில் அவர்கள்(பாஜக) முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.

ஆனால், அவர்கள் அத்தனை பேருக்கும், நாம் அத்தனை பேரும் தெளிவாக ஒரு பதில் சொல்லியாக வேண்டும் என்று கூறிய அவர், பாஜகவின் முயற்சி தமிழ்நாட்டில் பலனளிக்காது என்று திட்டவட்டமாக கூறினார். ஏனென்றால், இங்கே நடந்து கொண்டிருப்பது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கிடையாது என்றும், இங்கே நடந்துகொண்டிருப்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் சுயமரியாதை ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி என்றும் தெரிவித்தார். மேலும், கருப்பு, சிவப்பு கரை வேட்டிக்கூட்டம் இருக்கும்வரை, சங்கிகள் தமிழ்நாட்டில் கால் தடம் பதிக்க முடியாது" என்று உதயநிதி ஸ்டாலின் உறுதிபடக் கூறினார்.