சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கணக்கு மற்றும் அறிவியல் ஆசிரியர்கள், விளையாட்டு வகுப்பை கடன் வாங்கி பாடம் நடத்த வேண்டாம் என்று கோரிக்கை வைப்பதாக கூறினார். இதற்கு, அங்கு திரண்டிருந்த மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

Continues below advertisement

“இந்தியாவிலேயே மாணவர்களுக்கு காலை உணவு கொடுத்த முதல் மாநிலம் தமிழ்நாடு“

இந்த பிரமாண்ட விழாவில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் அடிக்கடி சொல்வது ஒன்றே ஒன்று தான், அது, கல்வி ஒன்றே அழிக்க முடியாத சொத்து என கூறிய அவர், கல்வி மாணவர்களுக்கான சொத்து என்றால், இங்கே அமர்ந்திருக்கும் மாணவர்கள்தான் நமது தமிழ்நாட்டின் சொத்து என்று கூறினார்.

இந்தியாவிலேயே, பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு கொடுத்த முதல் மாநிலம் தமிழ்நாடு தான் என பெருமிதம் தெரிவித்தார் உதயநிதி. வேலைக்கு செல்லும் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு உணவு செய்து கொடுக்க முடியாத சூழல் நிலவுவதால், மாணவர்கள் வகுப்புக்குச் சென்று, பசியால் பாடங்களை கவனிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், அந்த பிரச்னையை முதலமைச்சர் தீர்த்து வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

Continues below advertisement

புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டங்கள் மூலம்  மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் நிலையில், இந்த திட்டங்களின் மூலம், உயர்கல்வியை தொடர வசதியில்லாத சூழலில் இருந்த சுமார் 15,000 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளதாக உதயநிதி சுட்டிக்காட்டினார்.

மேலும், மாணவர்களை வேலை வாய்ப்புக்கு தயார்படுத்தும் வகையில் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும், படிப்புடன், வேலைக்கான திறமைகளை வளர்த்துக்கொள்ள இந்த திட்டம் உதவுவதாக அவர் கூறினார்.

“விளையாட்டு வகுப்பை கடன் வாங்கி பாடம் எடுக்காதீர்கள்“

கல்வி மட்டுமல்லாமல், உடற்கல்விக்கும், விளையாட்டிற்கும் முக்கியத்துவம் வழங்கும் முதலமைச்சர், அதற்காக செய்த உதவிகளையும் பட்டியலிட்டார் உதயநிதி ஸ்டாலின். அதோடு, விழாவிற்கு வந்திருந்த ஆசிரியர்களுக்கு ஒரு கோரிக்கை என்று கூறிய உதயநிதி, கணக்கு ஆசிரியர்களும், அறிவியல் ஆசிரியர்களும், விளையாட்டு வகுப்பை கடன் வாங்கி பாடம் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

அறிஞர் அண்ணா கூறியவற்றை சுட்டிக்காட்டி பேசிய உதயநிதி ஸ்டாலின்

இறுதியாக அண்ணா கூறிய 3 விஷயங்களை நினைவுகூர்ந்தார் உதயநிதி. அதாவது, தான் முதலமைச்சர் ஆனபிறகு, தமிழ்நாட்டிற்காக, தமிழ் மக்களுக்காக 3 விஷயங்களை செய்துள்ளதாக அண்ணா கூறியதாகவும், அவை, தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது, தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை, இருமொழிக் கொள்கைதான் என்ற சட்டத்தை இயற்றியது, சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரத்தை வழங்கியது ஆகியவற்றை குறிப்பிட்டதாக உதயநிதி நினைவுகூர்ந்தார்.

தனக்குப் பிறகு ஆட்சிக்கு வருபவர்கள், இந்த 3 விஷயங்களையும் மாற்ற நினைத்தால் அவர்களுக்கு ஒரு அச்சம் வரும், மனதில் ஒரு பயம் வரும் என்றும், இதையெல்லாம் மாற்றிவிட்டால் மக்கள் நம்மை என்ன செய்வார்கள் என்ற பயம் தான் அது என்றும் அந்த அச்சம் எதிரிகளை எவ்வளவு நாட்களுக்கு ஆட்டிவைக்கிறதோ, அதுவரை தானே முதலமைச்சராக இருப்பேன் என்று அண்ணா கூறியதாக தெரிவித்தார் உதயநிதி.

அதையே தான் மாற்றி சொல்ல விரும்புவதாகவும், காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் போன்ற திட்டங்களை நமது முதலமைச்சரின் திராவிட மாடல் அரசு வழங்கியிருக்கிறது. இந்த திட்டங்களை என்றாவது, யாராவது மாற்ற நினைத்தால் கூட, அவர்கள் மனதிலும் ஒரு பயம் வரும். அந்த பயம் அவர்களுக்கு இருக்கும்வரை, தமிழ்நாட்டை ஆளப்போவது, மு.க. ஸ்டாலின் தான் என உதயநிதி குறிப்பிட்டார்.