சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழவில் க்லந்துகொண்டு பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், சினிமா தன்னை கைவிட்டுவிட்டால் கூட, தான் பிழைத்துக்கொள்வதற்கு இரண்டு டிகிரி வைத்திருப்பதாக தெரிவித்தார். அவர் பேசியதன் முழு விவரத்தை தற்போது பார்க்கலாம்.
“மாணவர்கள் எனக்கு இன்ஸ்பிரேஷனாக மாறிவிட்டனர்“
விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், இந்த நிகழ்வையும், அரசின் திட்டங்களையும் வாழ்த்தவே நிகழ்ச்சிக்கு வந்ததாகவும், ஆனால், மேடையில் மாணவர்கள் கூறிய கதைகளை தனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாணவர்கள் கூறிய ஒவ்வொரு விஷயத்தையும் கேட்டுவிட்டு திரும்பி செல்லும்போது, இன்னும் சிறப்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுவதாகவும் அவர் கூறினார்.
அரசு இவ்வளவு திட்டங்களை செயல்படுத்துவது எவ்வளவு நல்ல விஷயமோ, அதைவிட சிறப்பான விஷயமாக, மாணவர்கள் எப்படியாவது படித்து முன்னேறிவிட வேண்டும் என்று நினைப்பதை தான் பார்ப்பதாக சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
உலகில் எதையெல்லாம் பெரிய செல்வம் என்று நினைக்கிறோமோ, அதைவிட சிறந்த செல்வம் கல்வி என்பதை விளக்கும் திருக்குறளையும் அவர் சுட்டிக்காட்டி பேசினார்.
“ஒரு தலைமுறையில் ஒருவர் படித்தால், அடுத்தடுத்த தலைமுறை நன்றாக இருக்கும்“
மாணவர்கள் சாப்பிடுவதற்கும், பள்ளிக்கு செல்வதற்கும் கஷ்டப்பட்ட கதைகளை கூறிய நிலையில், தன் சொந்த அனுபவத்தை பகிர்ந்த சிவகார்த்திகேயன், தனது தந்தை ஒரு வேளை சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு சென்று வந்ததால், தான் 3 வேளையும் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு சென்றதாகவும், தனது தந்தை நடந்தே பள்ளிக்கு சென்றதால், தான் ஆட்டோ, ரிக்ஷா, பஸ், ட்ரெய்ன் போன்றவற்றில் பள்ளிக்கு சென்றுவந்ததாக தெரிவித்தார்.
இதன்மூலம், ஒரு தலைமுறையில் ஒருவர் படித்தால், அதற்கு அடுத்த தலைமுறை நன்றாக இருக்கும் என்பதை தனது குடும்பத்திலேயே பார்த்ததாக அவர் தெரிவித்தார். மேலும், தனது தந்தைக்கு இருந்த வசதியின் மூலம் அவர் ஒரு டிகிரியை மட்டுமே வாங்க முடிந்ததாகவும், அவர் ஒரு டிகிரி வாங்கி முன்னேறியதால், தன்னை 2 டிகிரி படிக்க வைத்ததாகவும், தனது சகோதரியை 3 டிகிரி படிக்க வைத்ததாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
“சினிமா கைவிட்டால் நான் பிழைத்துக்கொள்ள 2 டிகிரிக்கள் இருக்கின்றன“
தான் பி.இ மற்றும் எம்.பி.ஏ படித்துள்ளதாக தெரிவித்த சிவகார்த்திகேயன், “நான் படித்ததற்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தமில்லை என்று நீங்கள் கேட்கலாம், ஆனால், இப்போது நான் நடித்துக்கொண்டிருக்கும் போது எனக்கு இருக்கும் ஒரு நம்பிக்கை எனது 2 டிகிரிக்கள்தான்“ என தெரிவித்தார்.
சினிமாத் துறை என்பது சவாலான துறை. அதிலும், எந்த பின்னணியும் இல்லாமல் இந்த துறைக்குள் நுழைவதே அசாத்தியமான விஷயம் என குறிப்பிட்ட அவர், அப்படி இந்த துறையில் சவால் வரும்போதெல்லாம், தனக்கு இருக்கும் ஒரே தைரியம், ஒருவேளை திரைத்துறை என்னை அனுப்பிவிட்டால், அந்த 2 டிகிரிக்களை வைத்து, ஏதேனும் ஒரு வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்பதுதான் என மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசினார்.
“மார்க்குக்காகவும் படிங்க, வாழ்க்கைக்கு தேவையானதையும் படிங்க“
இறுதியாக மாணவர்களுக்கு அறிவுரை கூறிய சிவகார்த்திகேயன், மதிப்பெண் வாங்குவதற்காக படிக்கும் அதே வேளையில், வாழ்க்கைக்கு தேவையானதையும் படியுங்கள் என அறிவுரை வழங்கினார். அப்போது தான், அந்த படிப்பை வைத்து நன்றாக சம்பாதித்து வாழ்க்கையில் அனைத்தையும் பெற முடியும் என சிவகார்த்திகேயன் கூறினார்.
மேலும், படிப்பை தாண்டி எல்லோராலும் ஏதாவது ஒரு விஷயத்தை செய்ய முடியும், அதை செய்யுங்கள், என்னாலேயே முடியும் போது, உங்களாலும் முடியும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார் சிவகார்த்திகேயன்.