திருப்பரங்குன்றம் விவகாரம் பெரும் பிரச்னையாக மாறியுள்ள நிலையில், அது குறித்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  தமிழ் மண்ணில் மதத்தை வைத்து குழப்பத்தை ஏற்படுத்த முடியாது என்று கூறியுள்ளார்.

Continues below advertisement

“மதத்தை வைத்து குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பவர்களின் ஆசை பலிக்காது“

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பதிலளித்தார். அப்போது, மதத்தை வைத்து இங்கே குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பவர்களின் ஆசை தமிழ்நாட்டு மண்ணில் பலிக்காது என்று கூறினார்.

மேலும், இது திராவிட மண், தமிழ் மண், நிச்சயமாக அதற்கு நமது அசும் இடம் கொடுக்காது என்று கூறிய அவர், தமிழ்நாட்டு மக்களும் அதை விரும்ப மாட்டார்கள் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

Continues below advertisement

விஸ்வரூபம் எடுத்துள்ள திருப்பரங்குன்றம் விவகாரம்

காத்திகை தீபத்தை ஒட்டி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அந்த உத்தரவு நிறைவேற்றப்படாததால் மனுதாரர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

அதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மத்திய பாதுகாப்புப் படையினருடன் மலை உச்சிக்கு சென்று தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். இதையடுத்து, மனுதாரர் ராமரவிக்குமார் உள்ளிட்டோர், இந்து அமைப்பினருடன் இணைந்து, சிஐஎஸ்எஃப் வீரர்களுடன் திருப்பரங்குன்றம் சென்றனர்.

அவர்கள், முருகன் கோவிலுக்கு அருகே உள்ள பழனியாண்டவர் கோவில் பாதை வழியாக மலை உச்சிக்கு செல்ல முயன்றபோது, போலீசார் தடுப்பு வேலிகளை போட்டு அனுமதி மறுத்தனர். இதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவை தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை எனக் கூறி, இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தினர். தீபத் தூணில் தீபமேற்ற அனுமதிக்குமாறு முழக்கமிட்டனர்.

மேலும், தடுப்புகளை உடைத்துக்கொண்டு அவர்கள் செல்ல முயன்றபோது, போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, ஒரு காவலர் காயமடைந்தார். இதையடுத்து பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். மலை போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, திருப்பரங்குன்றம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதனிடையே, நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது.