மும்மொழிக் கொள்கை, நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் பற்றவைத்த சுயமரியாதை நெருப்பு இந்தியா முழுவதும் காட்டுத்தீ போல பரவியுள்ளது என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். பல தென்மாநிலத் தலைவர்கள் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேச ஆரம்பித்து இருக்கிறார்கள் என கூறியுள்ளார். ஸ்டாலினை தொடர்ந்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி. ராமாராவ் ஆகியோர் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


அதிரடியாக பேசிய துணை முதல்வர் உதயநிதி:


சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அதில் பேசிய அவர், "புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நிதி கொடுக்க மாட்டோம் என்று மத்திய கல்வி அமைச்சர் மிரட்டுகிறார்.


ஆனால், இவர் மிரட்டினால் பயப்பட நாம் அதிமுக அல்ல. திமுக. இங்கு எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடக்கவில்லை. மு.க. ஸ்டாலின் ஆட்சி நடக்கிறது என்பதை மத்திய அரசு உணர வேண்டும்" என்றார்.


தொடர்ந்து பேசிய துணை முதல்வர் உதயநிதி, "தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிக்க முடியாது. தமிழ்நாட்டிற்குள் இந்தியை அனுமதித்தால் நம்முடைய தாய்மொழியே அழிந்துவிடும். தமிழ்நாட்டில் எப்பொழுதும் இருமொழிக்கொள்கைதான். இந்தியை திணிக்க குறுக்கு வழியில் மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. நீங்கள் மிரட்டினால் பயப்பட நாங்கள் அதிமுகவோ, எடப்பாடி பழனிசாமியோ கிடையாது.


"ஸ்டாலின் பற்றவைத்த நெருப்பு"


மும்மொழிக் கொள்கை, நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் பற்றவைத்த சுயமரியாதை நெருப்பு இந்தியா முழுவதும் காட்டுத்தீ போல பரவியுள்ளது. பல தென்மாநிலத் தலைவர்கள் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேச ஆரம்பித்து இருக்கிறார்கள்" என்றார்.


ஸ்டாலினின் குற்றச்சாட்டை தொடர்ந்து, தென் மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி. ராமாராவ் ஆகியோர் இதுகுறித்து பேசியுள்ளனர்.


ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்த கே.டி. ராமாராவ், "ஸ்டாலினுடன் நான் முழுமையாக உடன்படுகிறேன். மேலும், இந்த விஷயத்தில் அவரை முற்றிலும் ஆதரிக்கிறேன். தேசத்திற்கு மிகவும் தேவைப்படும்போது, ​​குடும்பக் கட்டுப்பாட்டு திட்டங்களை முறையாகசெயல்படுத்தியதற்காக தென் மாநிலங்களை நீங்கள் தண்டிக்க முடியாது.


தென் மாநிலங்களின் முயற்சிகளைக் கருத்தில் கொள்ளாமல் தொகுதி மறுசீரமைப்பை செயல்படுத்துவது ஜனநாயகம், கூட்டாட்சி இல்லை" என்றார்.