Udhayanithi Stalin: விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டசபையில் அமைச்சர்கள் அமரும் முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 


இன்று தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு தற்போது அமைச்சரவையில் அமர்வதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதலைமைச்சரின் இருக்கையில் இருந்து 10வது எண் கொண்ட இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. 


அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவருக்கு தி.மு.க.வினரும், அவரது நண்பர்களும், அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அமைச்சராக பொறுப்பேற்றுள்ள இந்த தருணத்தில் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். 




அதாவது, அமைச்சராக பொறுப்பேற்றுள்ள இந்த தருணத்தில் தன்னை வாழ்த்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முன்னாள் அமைச்சரும், தி.மு.க.வின் மூத்த தலைவருமான பேராசிரியர் அன்பழகன் இல்லை என வருத்தத்துடன் கூறியுள்ளார். இதுதொடர்பாக, உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது,


" அமைச்சர் பொறுப்பேற்கும் இந்த நேரத்தில் என்னை உச்சிமுகர்ந்து வாழ்த்த கலைஞர், பேராசிரியர் தாத்தாக்கள் அருகில் இல்லாதது மிகப்பெரிய வருத்தம். அவர்களின் மறு உருவாக வாழும் நம் தலைவர், முதலமைச்சருக்கு, கழக முன்னோடிகள் - கழக உடன்பிறப்புகள் - என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி மக்கள் இளைஞர் அணியினர் - தமிழ் மக்கள் ஆகியோரின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் பணியைத் தொடர்வேன்." என்று வாழ்த்து கூறியுள்ளார். 




மேலும், அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் கண்டிப்பாக தன் மீது விமர்சனங்கள் எழும் என்றும், அந்த விமர்சனங்களுக்கு தன்னுடைய செயல்பாடுகள் மூலம் பதிலளிப்பேன் என்றும் உறுதியுடன் கூறியுள்ளார். மேலும், அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் இனிமேல் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். 


புதியதாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்காக தலைமைச் செயலகத்தில் புதிய அறை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு உதவியாளராக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். விளையாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக மாற்றுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வு ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 


அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.