திமுக இளைஞரணி செயலாளராக உள்ள உதயநிதி கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வென்று முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதைதொடர்ந்து, கட்சிப்பணி மற்றும் திரைத்துறையில் ஒரே நேரத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தாலும், உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என, மூத்த அமைச்சர்கள் பலரும் வலியுறுத்தி வந்தனர். இதன் காரணமாக தமிழ்நாட்டில் எப்போது வேண்டுமானாலும் அமைச்சரவை மாற்றம் நிகழலாம் என கருதப்பட்டது.
அமைச்சராகிறார் உதயநிதி:
இந்நிலையில் தான் உதயநிதியை அமைச்சராக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதலமைச்சர் பரிந்துரைத்திருந்தார். அதையேற்று, நாளை காலை 9:30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உதயநிதிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டுத் துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனிடையே, உதயநிதிக்கான அறை தலைமைச் செயலகத்தில் தயாராகி வருகிறது. சட்டப்பேரவைக் கட்டிடத்தின் 2-ம் தளத்தில் உள்ள அறையில் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் செயலராக இருந்த அபூர்வா மாற்றப்பட்டு, டெல்லியில் தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையராக இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அதுல்ய மிஸ்ரா அப்பதவியில் நியமிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டது.
அமைச்சரவையில் மாற்றம்:
தற்போதைய சூழலில் அமைச்சர் மெய்யநாதன் சுற்றுசூழல் - காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை பொறுப்புகளை வகித்து வருகிறார். அதிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை உதயநிதிக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் முறையாக செயல்படாதவர்கள் மற்றும் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிய அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை மாற்றத்தின் போது ஐ.பெரியசாமி மற்றும் உதயநிதிக்காக திமுக இளைஞரணி செயலாளர் பதவியை விட்டுக்கொடுத்த வெள்ளக்கோவில் சாமிநாதன் உள்ளிட்டோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
தாத்தா, அப்பாவை மிஞ்சிய உதயநிதி:
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எம்.எல்.ஏ. ஆன 10 ஆண்டுகளுக்கு பிறகு தான் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றார். அதைதொடர்ந்து, தற்போதைய முதலமைச்சரான ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆன 17 அண்டுகள் கழித்து தான் அமைச்சரானார். ஆனால், சட்டமன்ற உறுப்பினரான 19 மாதங்களிலேயே உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகிறார் என்பது குறிப்பிடத்தகது.
உதயநிதியின் பரப்புரையும், அமைச்சர் பொறுப்பும்:
கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, ஒரே ஒரு செங்கலை வைத்து கொண்டு அவர் செய்த பரப்புரை மாநிலம் முழுவதும் பேசுபொருளானது. குறிப்பாக, மக்கள் மத்தியில் அவரது பரப்புரை தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். இதையடுத்து, உதயநிதி தலைமையில் நடத்தப்பட்ட இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டமும் அவரின் அரசியல் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே, உதயநிதி தன்னுடைய தொகுதியில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோக்கள் கூட அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவின. இதற்கிடையே பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் உதயநிதியின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதேபோல முக்கிய அமைச்சர்களான செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, சேகர் பாபு ஆகியோரும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று வெளிப்படையாகவே தெரிவித்தனர். அதேபோல அமைச்சர் மூர்த்தி, சிவசங்கர் உள்ளிட்டோரும் உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர். எனினும் இதுபற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
அதே நேரத்தில் அரசு விழாக்களிலும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சட்டப்பேரவையில் முதலமைச்சருக்கு பின்னால் இரண்டு வரிசைகள் தள்ளி உதயநிதிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது.
அமைச்சர்கள் பங்கேற்கும் விழாக்களில், தவறாமல் விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. சொந்தத் தொகுதியான திருவல்லிக்கேணி - சேப்பாக்கத்தில், சாலைகள் சீரமைப்பு, மதுக்கடைகள் அகற்றம் எனப் பல மாற்றங்களை கொண்டு வந்ததாக உதயநிதி தொடர்ந்து பாராட்டுகளை பெற்று வருவது நினைவுகூறத்தக்கது.