தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரையை அடுத்து டிசம்பர் 14ஆம் தேதி அமைச்சராக பதவியேற்கிறார் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி.


திமுக இளைஞரணி செயலாளராக உள்ள உதயநிதியை அமைச்சராக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதலமைச்சர் பரிந்துரைத்திருந்தார்.




முதலமைச்சரின் பரிந்துரையை அடுத்த டிசம்பர் 14ஆம் தேதி காலை 9:30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் சமீபகாலமாக அரசியலில் பேசுபொருளாக இருந்து வந்தது தமிழ்நாட்டின் அமைச்சரவை மாற்றம்தான்.


குறிப்பாக, உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவது குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இச்சூழலில், அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, ஒரே ஒரு செங்கலை வைத்து கொண்டு அவர் செய்த பிரச்சாரம் மாநிலம் முழுவதும் பேசுபொருளானது. குறிப்பாக, மக்கள் மத்தியில் அந்த பிரச்சாரம் எடுப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.


இதையடுத்து, இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட உள்ளதாத திமுக இளைஞரணி சார்பில் அறிவிப்பு வெளியானது. உதயநிதி தலைமையில் நடத்தப்பட்ட இந்த போராட்டமும் அவரின் அரசியல் வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.


சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே, உதயநிதி தன்னுடைய தொகுதியில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


இதுகுறித்த வீடியோக்கள் கூட அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவின. இதற்கிடையே பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் உதயநிதியின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.


அதேபோல முக்கிய அமைச்சர்களான செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, சேகர் பாபு ஆகியோரும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று வெளிப்படையாகவே தெரிவித்தனர். அதேபோல அமைச்சர் மூர்த்தி, சிவசங்கர் உள்ளிட்டோரும் உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர். எனினும் இதுபற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. 


அதே நேரத்தில் அரசு விழாக்களிலும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சட்டப்பேரவையில் முதலமைச்சருக்கு பின்னால் இரண்டு வரிசைகள் தள்ளி உதயநிதிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது.


அமைச்சர்கள் பங்கேற்கும் விழாக்களில், தவறாமல் விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. சொந்தத் தொகுதியான திருவல்லிக்கேணி - சேப்பாக்கத்தில், சாலைகள் சீரமைப்பு, மதுக்கடைகள் அகற்றம் எனப் பல மாற்றங்களை கொண்டு வந்ததாக உதயநிதிக்கு பாராட்டு குவிந்தது.


மே 7ஆம் தேதி அன்று திமுக அரசு பதவியேற்று ஓராண்டு ஆக உள்ள நிலையில், அதே தினத்தில் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று செய்திகள் வெளியாகின.


ஆனால், அப்போது அமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது உதயநிதி அமைச்சராவது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து ABP Nadu ஒரு வாரத்திற்கு முன்பே செய்தி வெளியிட்டிருந்தது. அதை உறுதி செய்யும் வகையில் ஆளுநர் மாளிகை தற்போது தகவல் வெளியிட்டுள்ளது.