ஈரோட்டில் இன்று தவெக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கட்சியின் தலைவர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். இது தொடர்பாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், விஜய்யை சீண்டும் வகையில் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

Continues below advertisement

உதயநிதி ஸ்டாலின் கூறியது என்ன.?

இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலினிடம், ஈரோடு தவெக பொதுக் கூட்டத்தில் இன்று திமுகவை அக்கட்சியின் தலைவர் விஜய் கடுமையாக, அதாவது தீய சக்தி என்ற அளவில் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், என்றைக்காவது விஜய்யிடம் இப்படி கேள்வி கேட்டிருக்கிறீர்களா.? என்று பதில் கேள்வி எழுப்பினார். மேலும், அவரை பேசவிட்டு பாருங்கள்.. அப்போது தெரியும் என்று விஜய்யை சீண்டும் வகையில் கூறினார்.

Continues below advertisement

ஈரோடு பொதுக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன.?

ஈரோட்டில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் விஜய்,  “எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் ஒரே வார்த்தையால் திமுகவை காலி செய்தார்கள். அவர்கள் ஏன் இவ்வளவு கடினமாக பேசுகிறார்கள் என்று அப்போது சிந்தித்தேன், இப்போதுதான் புரிகிறது. திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூயசக்தி. 2026 தேர்தலில், தீய சக்தி திமுகவிற்கும், தூயசக்தி தவெகவிற்கும்தான் போட்டியே“ என்று கூறினார்.

மேலும், “பெரியார் பெயரைச் சொல்லிக் கொள்ளையடிக்கும் இவர்கள்தான் நம்முடைய அரசியல் எதிரிகள். உங்களுக்குப் புரிந்தால் போதும், எனக்கு வேறு எதுவுமே தேவையில்லை. அதனால் தான் எதிரிகள் யார் எனக் கூறிவிட்டுக் களத்திற்கு வந்திருக்கிறோம். அவர்களை மட்டும்தான் எதிர்ப்போம். அதுவும் அந்த எதிரிகள், இப்போது இங்கே 2026 சட்டமன்றத் தேர்தலில் களத்தில் இருக்கிறார்களோ, அவர்களை மட்டும்தான் எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களையும், களத்திற்கும் அவர்களுக்கும் சம்மந்தமே இல்லாதவர்களையும் எதிர்க்கும் எண்ணம் எல்லாம் இல்லை. நீங்கள் கேட்கிறீர்கள் என்பதற்காக எல்லாம் எதிர்க்க முடியாது. எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது.“ என்றும் விஜய் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், “சமீபத்தில் ஒரு இடத்தில் நம் முதலமைச்சர் அவர்கள், 'என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்களே' என பேசினார். நான் ஏதாவது பேசினால் சினிமா வசனம், அவர் பேசினால் அது சினிமா வசனம் இல்லை. அந்த வரி சிலப்பதிகாரத்தில் இருந்து எடுக்கப்பட்டடது . உங்களை எப்படித்தான் புரிந்து கொள்வது.? எந்தெந்த விஷயத்தில் எல்லாம் உங்கள் குணாதிசயத்தை நாங்கள் புரிந்து கொள்வது.? அதையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள் என்றால் நன்றாக இருக்கும்“ என்று விஜய் அவேசமாக பேசினார்.

இப்படி திமுகவை சரமாரியாக விமர்சித்த நிலையில் தான், உதயநிதி ஸ்டாலின் அவரை சீண்டும் வகையில் தற்போது பதிலளித்துள்ளார். இவரது சவாலை ஏற்று, விஜய் செய்தியாளர்களை சந்திப்பாரா.? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.