எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


குறிப்பாக, தமிழ்நாட்டில் மாநில அரசு எடுக்கும் நிலைபாட்டுக்கு நேர் எதிரான கருத்தை தெரிவித்து வருகிறார் ஆளுநர் ஆர். என். ரவி அந்த வகையில், குடிமைப் பணிகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுடனான சந்திப்பின்போது ஆளுநர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


ஸ்டெர்லைட் போராட்டம்:


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற 13 பேரை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் அப்போது தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. 


இந்த சம்பவம் குறித்து பேசிய ஆளுநர் ஆர். என். ரவி, "நாட்டின் சுற்றுச்சூழல், மனித உரிமை, காலநிலை மாற்றம் என பல்வேறு காரணிகளை வளர்ச்சிக்கு எதிராக பல தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் நிதிகள் போராட்டம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் ஆண்டுக்கு 250 கோடி வரையில் இதுபோன்ற நிதிகள் பயன்படுத்ப்பட்டுள்ளது.


கேரள மாநிலம் விளிஞ்சம் துறைமுகம் கொண்டு வரும்போதும் கூடங்குளம் அணு உலை வரும் போதும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் மக்களை தூண்டவும் இதுபோன்ற நிதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.


ஆளுநருக்கு உதயநிதி சவால்:


தமிழ்நாடு ஆளுநர் பேசிய கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆளுநரின் கருத்துக்கு பதிலடி தந்துள்ள தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, "ஆளுநர் மாளிகையில் அமர்ந்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை பற்றி ஆளுநர் பேசுவது கண்டனத்துக்குரியது.  நான் ஆளுநருக்கு சவால் விடுகிறேன். தூத்துக்குடிக்கு சென்று உங்களால் இந்த கருத்தை பேச முடியுமா?" என்று சவால் விடுத்துள்ளார். தொடர்ந்து நிலுவையில் இருக்கும் சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம் என்று ஆளுநர் பேசியிருந்தது மாநில சுயாட்சிக்கு இழுக்கு  என்றும் உதயநிதி விமர்சித்துள்ளார்.


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் பல்வேறு நலத்திட்டங்களை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். இவ்விழாவில் சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் கலந்து கொண்டார். 


துப்பாக்கிச்சூடு:


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நச்சுக்கள் வெளியேறுவதாக  அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். ஆலையில் ஏற்படும் மாசுவால் தாங்கள் மிக கடுமையாக பாதிக்கப்படுவதாக அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகாலமாக போராடி நடத்தி வந்தனர். அவர்களின் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு மிகப்பெரிய பேரணியாக நடந்தபோதுதான் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் அப்போதைய அ.தி.மு.க. அரசிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்ய நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை கடந்தாண்டு வெளியிடப்பட்டது.


அதில், போராட்டத்தை தவறாக கையாண்டதாக அப்போதைய தமிழ்நாடு அரசு மீது குற்றம்சாட்டப்பட்டது. அதேபோல, துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான அனைவரின் மீது குற்ற நடவடிக்கையும் துறைசார் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.


இந்த சூழலில், வெளிநாட்டு நிதிகளால் மக்கள் தூண்டப்பட்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியதாக ஆளுநர் ஆர.என்.ரவி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.