Israel - Hamas War: உலகம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் விசயம் என்றால் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர்தான். ஏற்கனவே ரஷ்யா - உக்ரைன் போர் நடைபெற்றுக்கொண்டு இருப்பதால், மூன்றாவது உலகப் போருக்கு இந்த போர்கள் வழிவகுத்து விடுமோ பதற்றம் ஏற்பட்டுள்ளது. 


மருத்துவமனை மீது தாக்குதல்:


பாலஸ்தீனத்தை சேர்ந்த ஆயுதக்குழுவான ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் இடையேயான போர் 12வது நாளை எட்டியுள்ளது. இந்த போரினால் ஏற்கனவே குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என ஏராளமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த போரின் ஒரு கட்டத்தில், காஸா மீது தாக்குதல் நடத்தவுள்ளதால், காஸாவில் உள்ள பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை  செய்தது.


இதையடுத்து, தெற்கு காஸா பகுதியில் உள்ள அல்-அக்லி என்ற மருத்துவமனை மீது நேற்று அதாவது அக்டோபர் 17ம் தேதி நள்ளிரவில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 500 பேர் உயிரிழந்துள்ளதாக காஸா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமைச்சர் உதயநிதி கண்டனம்


மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ”காஸாவில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறு குழந்தைகள் உட்பட பல அப்பாவி பொதுமக்கள் தங்கள் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்ததற்கு காரணமானவர்கள் அனைவரையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.


மருத்துவமனைகள் போன்ற வளாகங்களில் தாக்குதல் நடத்தக் கூடாது என்ற சர்வதேச போர் விதிமுறைகளுக்கு எதிராக இந்த தாக்குதல் நடந்துள்ளது என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. நாம் இன்னும் நாகரீகமானவர்கள் என்று கூறும்போது, ​​வரலாற்றில் இதற்கு முன்னரும், இன்றும் ஒரு போரை உலகம் ஏற்கக்கூடாது.


எந்தவொரு பிரச்சினைக்கும் போர் ஒருபோதும் தீர்வாகாது. காஸாவில் அமைதியை மீட்டெடுக்கவும், மனிதாபிமானமற்ற வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஐ.நா. மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் முன்வர வேண்டிய நேரம் இது” என பதிவிட்டு தனது வருத்தத்தையும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளார்.


அதிகப்படியான உயிரிழப்பு


தற்போது நடைபெறும் போரில், ஒரே தாக்குதலில் அதிகப்படியான உயிரிழப்புகளை ஏற்படுத்திய சம்பவமாக இது மாறியுள்ளது. இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்திய ஒரு படுகொலை என பாலஸ்தீனிய அதிகாரசபையின் சுகாதார அமைச்சர் மை அல்கைலா தெரிவித்துள்ளார்.


அதேபோல் ரபா நகரில்  நடைபெற்ற தாக்குதலில் 27 பேரும், கான் யூனிசில் நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் 30 பேரும் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பாலஸ்தீன அரசாங்கம் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது. ஜோடார்ன், எகிப்து மற்றும் கத்தார் போன்ற நாடுகளும் இந்த தாக்குதலுக்கு கண்டனங்களை பதிவு செய்துள்ளன.




இஸ்ரேல் ராணுவம் மறுப்பு:


காஸா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுக்கு, மருத்துவமனை மீதான இந்த தாக்குதலை நாங்கள் முன்னெடுக்கவில்லை என இஸ்ரேல் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் தவறுதலாக மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதகாவும் இதுதொடர்பாக அவர்கள் நடத்திய உரையாடலை இடைமறித்து கேட்டோம் எனவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.


ஹமாஸ் தரப்பு விளக்கம்:


இஸ்ரேல் ராணுவம் கூறுவது முற்றிலும் பொய், ராக்கெட்டுகள் எதுவும் மருத்துவமனை குண்டுவெடிப்பில் ஈடுபடவில்லை என்று ஹமாஸ் அமைப்பு விளக்கமளித்துள்ளது. தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் காஸா நகரத்திலோ? அல்லது அதைச் சுற்றியோ எந்தவிதமான தாக்குதல் நடவடிக்கைகளை தங்கள் அமைப்பினர் ஈடுபடவில்லை? எனவும் தெரிவித்துள்ளது.