முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று தென்காசியில் நடந்த அ.தி.மு.க. 52வது தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, அவர் பேசியதாவது, “எம்.ஜி.ஆர். 1972ம் ஆண்டு அக்.17 அன்று அ.தி.மு.க.வை தொடங்கி வைத்தார். புரட்சித் தலைவி அம்மா அந்த கழகத்தை கட்டிக்காத்தார். எம்.ஜி.ஆர். என்ற மாமனிதனால் நம்மை போன்ற சாதாரண தொண்டன் கூட இந்த நிலைக்கு உயர்ந்துள்ளோம். எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆசியோடு அ.தி.மு.க. தமிழ்நாட்டில் 30 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தது.


அ.தி.மு.க. தொடக்க விழா:


51 ஆண்டுகாலத்தில் 30 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்த ஒரே கட்சி அ.தி.மு.க. மட்டுமே ஆகும். இந்த 30 ஆண்டுகாலத்தில் ஒடுக்கப்பட்டவர்கள், அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு சென்று சேரும் வகையில் திட்டங்களை தந்த தலைவர்கள் இரு பெரும் தலைவர்கள். இன்று தமிழ்நாடு இந்தியாவிலே முதன்மை மாநிலமாக உள்ளது என்று சொன்னால் அ.தி.மு.க. ஆட்சி இருந்த காரணத்தினாலே, இந்தியாவிலே முதன்மை மாநிலமாக திகழ்கிறது.


அந்த 30 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில்தான் ஏழைகளுக்கான திட்டங்கள் தீட்டப்பட்டது. கிராமப்புறம் முதல் நகரம் வரை ஒடுக்கப்பட்ட மக்கள் ஏற்றம் பெற திட்டங்கள் தீட்டிய அரசாங்கம் அ.தி.மு.க. அரசு. எம்.ஜி.ஆர். சிறுவயதாக இருந்தபோது பட்டினியால் துடித்தார். அந்த நிலை தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது என்பதற்காக தமிழ்நாட்டில் சத்துணவு கொண்டு வந்தார். நாளொன்று 62 லட்சம் குழந்தைகள் சத்துணவு சாப்பிடுகிறார்கள்.


சத்துணவுத் திட்டம்:


இந்தியாவிற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது சத்துணவு திட்டம். பல்வேறு மாநில முதலமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து இந்த சத்துணவுத் திட்டம் எந்தளவு சிறப்பாக இருக்கிறது? எந்தளவு சத்துணவுத் திட்டத்தினால் குழந்தைகள் பயன்படுகின்றனர்? என்பதை கண்டறிந்து இந்தியாவில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். இந்த மண்ணில் இருந்து அவர் மறைந்தாலும், மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர்., அம்மா.


இருபெரும் தலைவர்கள் செய்த சாதனைகள் இன்றும் மக்கள் உள்ளத்தில் பேசப்படுகிறது. எத்தனையோ தலைவர்கள் பிறக்கிறார்கள். வாழ்கிறார்கள். மறைகிறார்கள். இடைப்பட்ட காலத்தில் மக்களுக்கு யார் நன்மை செய்கின்றார்களோ? அவர்கள்தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அப்படி வாழக்கூடிய தெய்வங்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா. அப்படிப்பட்ட கட்சியிலே நாம் இருக்கிறோம். அப்படிப்பட்ட தலைவர்கள் உருவாக்கிய கட்சி அ.தி.மு.க.


கார்ப்பரேட் கம்பெனி:


இன்னும் சில கட்சி இருக்கிறது, குடும்ப கட்சி. அந்த கட்சி என்னவென்று உங்களுக்கு தெரியும். குடும்பத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி தி.மு.க. அந்த கட்சியை ஒழுங்குபடுத்த கணக்கு கேட்டதற்காக எம்.ஜி.ஆரை வெளியேற்றியது. ஏழை, எளிய மக்களுக்காக அ.தி.மு.க.வை நாட்டுக்கு அடையாளம் காட்டினார் எம்.ஜி.ஆர். ஆனால், தி.மு.க. என்பது கட்சி அல்ல. அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதற்கு சேர்மேன் இப்போது ஸ்டாலின். அதற்கு டைரக்டர் உதயநிதி ஸ்டாலின். கனிமொழி, சபரீசன், ஸ்டாலின் மனைவி துர்காம்மாதான் கம்பெனி. இவர்கள் எல்லாம் டைரக்டர்கள். அவர்கள் கட்சி நடத்தவில்லை. அது கார்ப்பரேட் கம்பெனி.


அந்த கார்ப்பரேட் கம்பெனி ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகாலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்தார்கள்? ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்திற்கு ரிப்பன் வெட்டுகிறார். இதுதான் அவர் செய்யும் வேலை. தினந்தோறும் போட்டோஷூட். அழகாக போஸ் கொடுப்பார்.


மக்களைப் பற்றி கவலைப்படாத பொம்மை முதலமைச்சர். இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார். தென்காசியில் ஒரு திட்டத்தையாவது செய்துள்ளாரா? எல்லாமே அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்ததுதான். அ.தி.மு.க. ஆட்சியில் ஒன்றுமே செய்யவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல பச்சை பொய் பேசுகிறார்”


இவ்வாறு அவர் பேசினார்.