ஆசிய விளையாட்டு போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகிறது.


ஆசிய விளையாட்டுப் போட்டிகள்:


இந்த போட்டிகள் கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி தொடங்கியது. வரும் அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் 48 வகையான விளையாட்டுகளில் 481 போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்தியாவில் இருந்து 38 விளையாட்டுகளில் மொத்தம் 634 வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.


100 வது பதக்கம்:


இதில் இன்று (அக்டோபர் 7) நடைபெற்ற ’மகளிர் கபடி’ இறுதிப் போட்டியில் இந்திய அணி சீனத் தைபே அணியை 25-26 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது. இந்த பதக்கம் இந்த ஆசிய தொடரில் இந்தியா வென்ற 100-வது பதக்கமாக அமைந்தது. தற்போது வரை இந்தியா 25 தங்கம் 35 வெள்ளி 40 வெண்கலம் ஆகியவற்றை வென்றுள்ளது. அதோடு பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தில் தொடர்ந்து வருகிறது.


இன்னும் மல்யுத்தம் போன்ற போட்டிகள் இருப்பதால் இந்தியா இன்னும் அதிக பதக்கங்கள் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரின் இந்தியா இதுவரை வென்றுள்ள பதக்க எண்ணிக்கையே இதுவரை ஆசிய போட்டிகள் வரலாற்றில் இந்தியா வென்ற அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாகும்.


உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து:


இச்சூழலில்,  வரலாற்றில் முதல் முறையாக 100-க்கும் அதிகமான பதக்கங்களை குவித்து இந்தியா வீரர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.






இது தொடர்பாக அவர் இன்று (அக்டோபர் 7) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ வரலாற்றில் முதல் முறையாக 100-க்கும் அதிகமான பதக்கங்களை குவித்து இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்த சாதனைக்கு வித்திட்ட நம் வீரர் - வீராங்கனையருக்கு வாழ்த்துகள். 


குறிப்பாக, தமிழ்நாட்டை சேர்ந்த 14 வீரர்கள் தனி நபர் மற்றும் குழுப்போட்டிகளில், 7 தங்கம் - 7 வெள்ளி மற்றும் 8 வெண்கல பதக்கங்கள் என 22 பதக்கங்களை வென்று நம் மாநிலத்துக்கு பெருமைத் தேடித் தந்துள்ளனர். அவர்களுக்கு என் பாராட்டுகள்.


நம் வீரர் - வீராங்கனையரின் இந்த சாதனை ஏராளமான இளைஞர்கள் - இளம்பெண்களை விளையாட்டுத்துறையை நோக்கி நம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்கச் செய்யும் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.” என்று கூறியுள்ளார்.


முன்னதாக, கடந்த 2018-ல் ஜகார்த்தாவில் நடந்த போட்டியில் இந்தியா 16 தங்கம், 23 வெள்ளி, 31 வெண்கலத்துடன் 70 பதக்கங்கள் வென்றிருந்தது. அதற்கு முன்னதாக 2014-ம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் 11 தங்கம், 10 வெள்ளி, 36 வெண்கலம் என 57 பதக்கங்களை வென்றிருந்தது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.


மேலும் படிக்க: ICC Cricket World Cup 2023: சாதனை மேல் சாதனை.. சிக்கிய இலங்கையை சிதைத்த தென் ஆப்ரிக்கா படைத்த வரலாற்று பட்டியல் இதோ..


 


மேலும் படிக்க: SL Vs SA WC 2023: டி காக், டு சென், மார்க்ரம் மிரட்டல் சதம்! பஞ்சரான இலங்கை பவுலிங்! 429 ரன்கள் டார்கெட்