உதயநிதி திறமையான இளைஞர் என்றும் வருங்காலத்தில் உதயநிதி இன்னும் பெரிய பொறுப்புகளை வகிப்பார் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:


''தமிழக முதல்வர் சொல்லும் திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படையில் திறமையான இளைஞரணிச் செயலாளராக இருக்கும் இளைஞர் உதயநிதி. அவர் இன்னும் சிறப்பாகச் செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வரும் காலங்களில் கட்டாயம் அவர் மிகப் பெரிய பொறுப்புகளை ஏற்று செயல்படுவார். திமுகவில் இதை வேண்டாம் என்று சொல்ல யாரும் கிடையாது. ஏன் தாமதமாக அமைச்சர் பதவியைக் கொடுத்தீர்கள் என்றுதான் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 


எல்லோரும் கேட்ட ஒன்றை மிகவும் காலதாமதமாக முதலமைச்சர் நிறைவேற்றி உள்ளார். வாரிசு அரசியல் குற்றச்சாட்டு வழக்கமாக வைப்பதுதானே. இது ஒன்றும் புதிதல்ல. முதல்வர் ஸ்டாலின் அரசியலுக்கு வந்தபோதில் இருந்தே இந்தக் குற்றச்சாட்டு இருக்கிறது. மக்கள் அனைவரும் இதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாமே தெரியும். 


வாரிசு அரசியல் என ஒரு 10 சதவீதம் இருக்குமா? ஏன் வாரிசு அரசியலே கூடாதா? அரசியல்வாதிகளின் பிள்ளைகளையே எடுத்துக்கொள்ளுங்கள். சட்டப்பேரவையில் 100, 200 பேர் இருந்தால் அதில் 10 பேர் வாரிசுகளாக இருப்பார்கள். மீதமெல்லாம் பொதுவான நியமனமாக இருக்கும். இது எல்லா இடங்களிலும் எல்லாக் கட்சிகளிலும் இருப்பதுதான். 


அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்பு உடையது. உதயநிதி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களுடனும் இணைந்து செயல்படுவோம்.'' 


இவ்வாறு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.




பின்னணி என்ன?


சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே, தன்னுடைய தொகுதி மக்களின் குறைகளை வீடு வீடாக சென்று நிறைவேற்றிக்கொடுத்தார் உதயநிதி. இதுகுறித்த வீடியோக்கள் கூட அப்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவின. இவ்வாறு தொடர்ந்து மக்களோடு மக்களாக நிற்பதைப் பார்த்து அப்போதே அவர் அமைச்சராவார் என்று ஊகப் பட்டியல் வெளியானது. இதற்கு ஒருசேர எதிர்பார்ப்பும் எதிர்ப்பும் எழுந்தது.


இதற்கிடையே பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் உதயநிதியின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதேபோல முக்கிய அமைச்சர்களான செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, சேகர் பாபு ஆகியோரும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று வெளிப்படையாகவே தெரிவித்தனர். அதேபோல அமைச்சர் மூர்த்தி, சிவசங்கர் உள்ளிட்டோரும் உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர். எனினும் இதுபற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. 


சில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்ற நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் மூர்த்தி, "மதுரையில் நடைபெற்ற பொற்கிளி வழங்கும் நிகழ்ச்சியின் வழியாகத்தான் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்தார். அவர் வருங்காலத்தை வழிநடத்த உள்ளார். தமிழக முதல்வருக்கு உற்ற துணையாக செயல்பட்டு வருகிறார்" என்று தெரிவித்திருந்தாட்.


உதயநிதி நாளை (டிசம்பர் 14ஆம் தேதி) காலை 9.30 மணிக்கு அமைச்சராகப் பதவியேற்க உள்ளார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.