தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “1956இல் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், நம்முடைய மாநிலம் நிலப்பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினமே நவம்பர் 1.
மதராஸ் மாகாணமாக இருந்த நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி, தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிரும் துறந்தார். இதைத் தன் இதயத்தில் தாங்கிய, கனிவின் திருவுருவம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா, தான் ஆட்சிக்கு வந்ததும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களையும் இன்னாளில் நினைவு கூருவோம்.
தியாகப் பெரும் பின்னணியில் தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் பிறந்த இந்த நாளை (நவம்பர் 1) வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை நடிகர் விஜய் தொடங்கி முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். தவெகவின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய் கொள்கை எதிரி பாஜக எனவும் அரசியல் எதிரி திமுக எனவும் போட்டுத்தாக்கினார்.
திராவிட மாடலை எதிர்க்கிறோம் மத பிரிவினைவாத அரசியலை எதிக்கிறோம். கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என பல கொள்கைகளை வெளியிட்டார். விஜய்யின் கொள்கைகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து விஜய் வெளியிட்ட நன்றி கடிதத்தில், “நம்முடைய அரசியல் பயணத்தை நாம் தொடங்கும் முன்னரே நம்மை விமர்சித்தவர்கள். இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள். விமர்சனங்களில் ஏதேனும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் தெரிந்தால் எடுத்துக்கொள்வோம். மற்றவற்றை மறந்தும் கூட மனதில் ஏற்றிவிடாமல் கடந்து செல்ல பழகுவோம். அத்தியாவசித் தேவைகளை நோக்கிய உழைப்பு மட்டுமே இனி நம் அரசியல். எப்போதும் ஆக்கப்பூர்வமான அரசியலையே கையிலெடுப்போம். 2026-ல் நம் இலக்கை அடைவோம்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.