தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்து வருகிறது. திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளுக்கு போட்டியாக வரும் சட்டமன்ற தேர்தலில் குதித்துள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். விஜய் கட்சி தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியது.
விஜய்க்கு போன் போட்ட பவன் கல்யாண்:
திமுக-வை அரசியல் எதிரி என்றும், பாஜக-வை கொள்கை எதிரி என்றும் தெரிவித்து அரசியல் செய்து வருகிறார். இதனால், விஜய் தனித்தே தேர்தலைச் சந்திக்கும் சூழல் தற்போது வரை உள்ளது. கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்யின் தவெக பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. தொலைபேசியில் தொடர்பு கொண்ட பவன் கல்யாண் விஜய்யிடம், தனது சகோதரர் (அண்ணன்) சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம் கட்சியைத் தொடங்கி ஏற்பட்ட நிலைமைதான் தனித்து போட்டியிட்டால் உண்டாகும்.
என்ன சொன்னார்?
அதனால், அதிமுக - பாஜக-வுடன் கூட்டணி சேருங்கள். அப்போதுதான் தேர்தலில் வெற்றி பெற்று துணை முதலமைச்சராக முடியும். அடுத்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு முதலமைச்சராக முடியும் என்று அறிவுரை கூறியதாக கூறப்படுகிறது.
பவன் கல்யாண் தற்போது தெலுங்கு தேசம் கட்சியுடன் தனது ஜனசேனா கட்சியை கூட்டணி வைத்து ஆந்திர மாநில துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். தனது வெற்றி அஸ்திரத்தையே விஜய்யையும் பின்பற்ற பவன் கல்யாண் அறிவுறுத்தியுள்ளார்.
பிரஜா ராஜ்ஜியம் கட்சியைத் தொடங்கி ஆந்திர அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பவன் கல்யாண், அந்த மாநில சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தார். பின்னர், தனது கட்சியை காங்கிரசுடன் இணைத்தார். அதன்பின்பு, தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்து மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
என்ன செய்யப்போகிறார் விஜய்?
கரூர் சம்பவத்தின்போது விஜய் மீது விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட நிலையில், அவருக்கு அதிமுக - பாஜக தலைவர்கள் ஆறுதலாக கருத்து தெரிவித்தனர். விஜய்யும் அதற்கு நன்றி தெரிவித்தார். இந்த நெருக்கடியான சூழலில் விஜய்யை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக - பாஜக முயற்சித்து வருகிறது.
பாஜக-வை கொள்கை எதிரி என்று கூறும் விஜய் தனது முதல் தேர்தலிலே கூட்டணிக்காக காெள்கையை விட்டுக்கொடுப்பாரா? அல்லது கொள்கையிலே நிலைப்பாட்டுடன் இருப்பாரா? அல்லது விஜய்க்காக பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி கை கழுவுவாரா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.
தமிழக அரசியலில் தனது தீவிர பரப்புரையை மேற்காெள்ளத் தொடங்கிய விஜய், நாமக்கல் பரப்புரையில் அதிமுக-வை கடுமையாக விமர்சித்திருந்தார். அவரது செயல்பாடுகள் இதன்பின்பு எவ்வாறு இருக்கப்போகிறது? என்பதை அடுத்தடுத்த நாட்கள் தெரியவரும்.