தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. தீபாவளி பண்டிகை என்றால் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் கொண்டாட விரும்புவார்கள். வெளியூர்களில் வசிக்கும் இளைஞர்கள் தங்களது குடும்பத்துடன் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள்.
தீபாவளி பண்டிகை:
சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, திருப்பூர், மதுரை, சேலம் போன்ற பெருநகரங்களில் வசித்து வரும் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்களும் இஈயக்கப்பட்டு வருகிறது.
கட்டண கொள்ளை:
அரசு பேருந்துள், ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் தனியார் பேருந்துகளில் பயணிப்பது வழக்கம். தனியார் பேருந்துகளைப் பொறுத்தமட்டில் தீபாவளி, பொங்கல் பண்டிகை என்றாலே வழக்கமான கட்டணத்தை காட்டிலும் அதிகளவு கட்டணத்தை வசூலிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அந்த வகையில், வரும் 20ம் தேதி தீீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தனியார் பேருந்துகளில் முன்பதிவு தீவிரமாக நடந்து வருகிறது. ஆம்னி பேருந்துகள் தங்களது வழக்கமான கட்டணத்தை காட்டிலும் பன்மடங்கு கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இந்த கட்டணக் கொள்ளைக்கு எதிராக அரசு பல முறை நடவடிக்கைகள் எடுத்தும், தொடர்ந்து கட்டண கொள்ளை அரங்கேறி வருகிறது.
3500 ரூபாய்:
சென்னையில் இருந்து மதுரை செல்ல தனியார் பேருந்துகளில் வரும் 19ம் தேதி செல்ல ரூபாய் 1500க்கு அதிகமாக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டுள்ளது. நாகர்கோயில் செல்ல வரும் 19ம் தேதி செல்ல சில பேருந்துகளில் 3500 ரூபாய் வரை ஒரு நபருக்கு வசூல் செய்யப்படுகிறது.
சில தனியார் பேருந்துகளில் நேரடியாகச் சென்று தீபாவளிக்கு முதல் நாள் ஏறும் பயணிகளிடம் குறைந்தபட்சம் 2 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு தரப்பில் போதுமான அளவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் பேருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிறுவனங்களில் வழங்கப்படும் போனஸ் தொகை பேருந்துகளுக்கே சரியாகப் போகிறது என்று வேதனையுடன் பயணிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாகவே பயணிகள் தனியார் பேருந்துகளை அணுகும் சூழலில் அவர்கள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடவடிக்கை எடுக்க அரசு திட்டம்:
இதைத் தடுக்க அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. அரசுப்பேருந்துகளில் சென்னையில் இருந்து மதுரை வரை செல்ல சொகுசுப் பேருந்துகளில் ரூபாய் 445 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தனியார் பேருந்துகளில் ரூபாய் 1500 வசூலிக்கப்பட்டு வருகிறது. அரசு சார்பில் அதிகளவு கட்டணங்கள் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக பேருந்துகளில் மட்டுமின்றி ரயில்களிலும் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. குடும்பத்துடன் செல்பவர்களுக்கு முதன்மைத் தேர்வாக ரயில் உள்ளது.