கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் நேரில் சந்திக்க அனுமதி வழங்கக்கோரி, டிஜிபி மற்றும் Y பிரிவு தலைமை அலுவலகத்திற்கு இமெயில் மூலம் மனு அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

இந்தியாவை உலுக்கிய கரூர் சம்பவம் - Karur Stampede Death 

தமிழக வெற்றி கழகம் சார்பில் கரூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கியதில், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் நேரில் சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. 

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நேரடியாக சென்று திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட தமிழகத்தில் இருக்கும் பிரதான கட்சிகளின் தலைவர்கள் நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு மேல் கடந்துவிட்ட நிலையில், இதுவரை விஜய் வெளிவராமல் பனையூரில் பதுங்கி இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

Continues below advertisement

கைது நடவடிக்கையில் போலீஸ்

இச்சம்பவம் தொடர்பாக கரூர் தவெக மேற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் நகர செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகி நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதனிடையே, உயர்நீதிமன்றத்தில் இருவருடைய முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். இதேபோல், சமூக வலைதளத்தில் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட ஒரு சர்ச்சைப் பதிவிற்காக அவர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றி கழகத்தின், செயல்பாடுகள் முடங்கி இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நிர்வாகிகளிடம் விஜய் தொலைபோசியில் ஆலோசனை

இந்நிலையில், சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட விஜய், கரூர் மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க நிச்சயம் வருவேன் என தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அவர் எப்போது கரூர் செல்வார் என்ற கேள்விகள் எழுந்தன. இப்படிப்பட்ட சூழலில், கரூரை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளர்களிடம் விஜய் தொலைபேசி வாயிலாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பேசுவது குறித்து கருத்துக்களை அவர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. கரூரை சுற்றியுள்ள மாவட்டச் செயலாளர்களிடம் பேசிய விஜய், பிரச்னைகள் அனைத்தும் சரியாகிவிடும் எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவ வேண்டும் என்றும் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

மக்களை சந்திக்க அனுமதி கேட்கும் விஜய் 

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க விஜய் முடிவு எடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நேரில் சென்று மக்களை சந்திக்க அனுமதி வழங்குமாறு, தமிழக காவல்துறைக்கு இமெயில் மூலம் விஜய் தரப்பு அனுமதி கேட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோன்று Y பிரிவு பாதுகாப்பு தலைமையகத்திற்கும் இ-மெயில் மூலமாக அக்கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மக்களை நேரில் சந்திக்க அனுமதி கிடைத்தவுடன், விஜய் கரூர் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.