புதுச்சேரி: ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மீண்டும் டிசம்பர் 9ம் தேதி புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரி மீண்டும் எஸ்எஸ்பியிடம் தவெகவினர் இன்று மனு அளித்துள்ளனர்.

Continues below advertisement

ரோடு ஷோ நடத்த அனுமதி கிடையாது

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்க அனுமதி கோரி தவெகவினர் டிஜிபி அலுவலகத்தில் கடந்த வாரம் மனு அளித்தனர். ஆனால் காவல் துறை ரோடு ஷோவுக்கு அனுமதி தரவில்லை.

ரோடு ஷோ திட்டம்

தவெக தலைவர் விஜய், டிசம்பர் 5-ஆம் தேதி புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டு, அதற்கான அனுமதியை காவல்துறை தரப்பில் கோரியிருந்தது. கரூர் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்குவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ரோடு ஷோவுக்கு விதிமுறைகள் வழங்குவது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

Continues below advertisement

முதல்வர், காவல்துறை அதிகாரிகளின் தீவிர ஆலோசனை

இதனிடையே, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஏற்கெனவே சில முறை புதுச்சேரி வந்து காவல்துறை அதிகாரிகளையும் முதல்வரையும் சந்தித்து அனுமதி கோரியிருந்தார். நேற்றும் (செவ்வாய்க்கிழமை) புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் 4வது முறையாக முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை சந்தித்தனர். இருப்பினும், அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று காலை சட்டப்பேரவையிலுள்ள முதல்வர் அறைக்கு காவல்துறை டிஜிபி ஷாலினி சிங், ஐஜி அஜிஸ்குமார் சிங்ளா, டிஐஜி சத்தியசுந்தரம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வந்தனர். அவர்களுடன் சட்டத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனும் இணைந்து முதல்வர் ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்தினார்.

விஜய் பங்கேற்கவிருந்த ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவு விவரங்கள் ஆகியவை முதல்வர் ரங்கசாமிக்கு முழுமையாகத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பயிற்சி பெற்றும் பணி வாய்ப்பு இல்லாமல் உள்ள 68 ஊர்க்காவல் படை வீரர்கள் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ஈசிஆர் கோரிக்கையும் நிராகரிப்பும்

முதல்வர் - காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனையைத் தொடர்ந்து, புஸ்ஸி ஆனந்த் மீண்டும் முதல்வர் ரங்கசாமியை அவரது அறையில் சந்தித்தார். அப்போது, ரோடு ஷோவுக்கு மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத மற்றும் சாலை அகலமாக இருக்கும் பகுதியான புதுச்சேரி ஈசிஆரில் (சிவாஜி சிலை முதல் கொக்கு பார்க் வரை) சுமார் 1.5 கி.மீ தொலைவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் கோரிக்கை விடுத்தார்.

ஆனால், காவல்துறை அதிகாரிகள் "ரோடு ஷோவுக்கு அனுமதி கிடையாது; பொதுக்கூட்டம் நடத்த விண்ணப்பிக்கலாம்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. முதல்வர் சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த், செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை. தவெக தலைவர் விஜயின் ரோடு ஷோவுக்கு புதுச்சேரியில் அனுமதி கிடைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

ஐந்துவது முறையாக மனு

இந்த நிலையில், இன்று ஐந்துவது முறை முயன்றும் ரோடு ஷோவுக்கு அனுமதி கிடைக்காமல் புஸ்ஸி ஆனந்த் திரும்பினார். இந்நிலையில், எஸ்எஸ்பி கலைவாணனிடம் தவெகவினர் பொதுக் கூட்டம் நடத்த அனுமதிக் கோரி கடிதம் அளித்தனர். அதில், வரும் டிசம்பர் 9-ம் தேதி உப்பளம் துறைமுக மைதானத்தில் விஜய் பங்கேற்கும் தவெக பொதுக் கூட்டம் நடத்த அனுமதி தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். இதில் காலை 7 முதல் மாலை 6-க்குள் நேரம் ஒதுக்கி தரவும் கோரியுள்ளனர்.