தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருப்பவர் நடிகர் விஜய்.

Continues below advertisement

விஜய் சுற்றுப்பயணம்:

இவரது தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக அரசியல் களத்தில் குதித்துள்ளது. இந்த நிலையில், முதன்முறையாக நேற்று விஜய் மக்கள் சந்திப்பை நடத்தினார். தனது அரசியல் பரப்புரையை நேற்று தொடங்கிய அவர் திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூரில் பேசுவதாக இருந்தது. 

ஆனால், திருச்சியில் விஜய் விமான நிலையத்தில் இருந்து பரப்புரை பகுதியான மரக்கடைக்குச் செல்வதற்கே அவருக்கு 4 மணி நேரத்திற்கு மேலானது. பின்னர், அங்கிருந்து அவர் அரியலூர் சென்றார்.

Continues below advertisement

சேட்டை செய்த விஜய் ரசிகர்:

அரியலூரில் அவர் வருகை குறித்து தனியார்  ஆங்கில செய்தி நிறுவன நிருபர் தொலைக்காட்சியில் நேரலையில் செய்தி வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது, தவெக தொண்டரும், விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் கேமரா முன்பு உற்சாக மிகுதியில் நடனம் ஆடிக்கொண்டு வந்தார். பின்னர், தனது கழுத்தில் அணிந்திருந்த தவெக கொடியை அந்த நிருபர் கழுத்தில் அணிவிக்க முயன்றார். அந்த நிருபர் அந்த கொடியை தனது கழுத்தில் இருந்து அகற்றிவிட்டார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்த திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், அந்த தம்பியை யாரும் திட்டாதீங்க.. வருங்கால அமைச்சராக கூட வாய்ப்பிருக்கு. NDTV செய்தி சேனலின் மூத்த நிருபர் சாம் டேனியலிடம் மாஸ் காட்டிய அணில் குஞ்சு‌ என்று பதிவிட்டுள்ளார். 

தேர்தலில் எதிரொலிக்குமா?

விஜய் மக்களைச் சந்திக்க வேண்டும் என்று தொடர்ந்து பொதுமக்களும், தொண்டர்களும் கோரிக்கை வைத்திருந்த நிலையில், நேற்றைய விஜய்யின் மக்கள் சந்திப்பு மிகப்பெரிய அதிர்வலையை தமிழக அரசியலில் ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், லட்சக்கணக்கான தொண்டர்கள் விஜய்யை காண குவிந்ததும், இது தேர்தலில் எதிரொலிக்குமா? என்று கணக்குப் போடத் தொடங்கியுள்ளனர். 

விஜய் நேற்று திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், ரசிகர்கள் கூட்டம் காரணமாக அவரால் திருச்சி மற்றும் அரியலூரில் மட்டுமே மக்களைச் சந்திக்க முடிந்தது. இதையடுத்து, அவரது பெரம்பலூர் பயணம் ரத்து செய்யப்பட்டது. பெரம்பலூருக்கான மக்கள் சந்திப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தவெக தெரிவித்துள்ளது.