TVK Vijay: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில், அதிமுகவைச் சேர்ந்த சிடிஆர் நிர்மல் குமாரும் இணைய இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

தவெகவில் இணைந்த பிரபலங்கள்:

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியது முதலே, தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும், தொடர்ந்து அக்கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் தான் வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனர் மற்றும் விசிகவில் முன்னாள் துணைப் பொதுச்செயலாளராக இருந்த, ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணைந்துள்ளார். அதோடு, நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டதோடு, பேச்சாளராகவும் நன்கு அறியப்படும் காளியம்மாளும் தவெகவில் இணைந்துள்ளார். மேலும், பாஜகவில் இருந்து அதிமுகவில் இணைந்த சிடிஆர் நிர்மல் குமாரும், விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார்.

ஆதவ், காளியம்மாளுக்கு முக்கிய பொறுப்புகள்?

ஆதவ் அர்ஜுனாவிற்கு தமிழக வெற்றிக் கழகத்திம் தேர்தல் வியூக வகுப்பு துணைபொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடைய வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனம் மூலம், தவெக கட்சியை கடைக்கோடி வரை கொண்டு சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காளியம்மாளுக்கு துணைப்பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு தலைவராக இருந்த சிடிஆர். நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்திருந்தார். தற்போது அவரும் தவெகவில் இணைய உள்ளதாகவும், அவருக்கும் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

Continues below advertisement

எடப்பாடி பழனிசாமி ஷாக்:

விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, விஜயுடன் கைகோர்ப்பார் என கடந்த சில வாரங்களாகவே தகவல் வெளியாகி வந்தன. அது தற்போது உறுதியாகியுள்ளது. நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் தொடர்ந்து அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்களிடையே நன்கு பரிட்சயமான காளியம்மாளும், கட்சியில் தனக்கு மரியாதை இல்லை என நெருங்கிய வட்டாரங்களிடம் வேதனை தெரிவித்து வந்ததாக கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சீமான் மீதான அதிருப்தி காரணமாக, நாதக-வில் இருந்து விலகி தவெகவில் இணைய உள்ளார். இதனிடையே, யாரும் எதிர்பாராத விதமாக, அதிமுகவின் சிடிஆர் நிர்மல் குமாரும் தவெக பக்கம் தாவியுள்ளார். இது கட்சி தலைமை எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜயின் திட்டம் என்ன?

விஜய் மாநிலம் முழுவதும் மிகவும் பிரபலமானவர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், கட்சியையும், கட்சிக் கொள்ககளையும் மாநிலத்தின் கடைக்கோடி வரைக்கும் கொண்டு சேர்க்க அவர் மட்டுமே போதும் என்பது சாத்தியமற்றது. அதோடு, மக்களிடையே நன்கு அறிமுகமான இரண்டாம் கட்ட தலைவர்கள், கட்சியில் இல்லை என்பதும் தவெகவிற்கு முக்கிய பிரச்னையாக கருதப்படுகிறது. இந்நிலையில் தான், மக்களிடையே ஓரளவிற்கு நன்கு பிரபலமான, ஆதவ் அர்ஜுனா, காளியம்மாள் மற்றும் சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் தவெகவில் இணைந்துள்ளனர். இதன் மூலம், அனைத்து தரப்பு மக்களிடையேயும் தவெக கட்சியை கொண்டு சென்று சேர்க்க, விஜய்  திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.