இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், தவெக தனியாகவே 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதாக விஜய் அதிரடியாக அறிவித்துள்ளார். நிகழ்வில் பேசிய அவர், பரந்தூர் விமான நிலைய பிரச்னை தொர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் ஆவேசமாக பேசினார். அதன் முழு விவரத்தை தற்போது பார்க்கலாம்.

Continues below advertisement

“2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தலைமையில் கூட்டணி“

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில், கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட 1,200 பேர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், 2026 சட்டமன்ற தேர்தலில், கூட்டணி அமைப்பது குறித்த முடிவை எடுக்க, கட்சியின தலைவர் விஜய்க்கு முழு அதிகாரத்தை வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Continues below advertisement

பின்னர் நிகழ்வில் உரையாற்றிய விஜய், வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக, திமுக உடன் கூட்டணி இல்லை என்றும், தவெக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என்றும் உறுதிபட கூறினார்.

திமுக, பாஜக உடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறிய விஜய், கூடிக் குழைந்து கூட்டணிக்க போக தவெக ஒன்றும் திமுகவோ, அதிமுகவோ இல்லை என்று தெரிவித்தார்.

மக்களை மத ரீதியாக பிளவுபடுத்த பாஜக முயல்வதாகவும், பாஜக-வின் விஷமத்தனமான, பிளவுவாத அரசியல் தமிழ்நாட்டில் எப்போதுமே எடுபடாது என அவர் கூறினார். மேலும், தந்தை பெரியாரை அவமதித்தோ, அண்ணாவை அவதூறுக்கு உள்ளாக்கியோ, எங்கள் மதிப்புமிக்க தலைவர்களை வைத்து அரசியல் செய்ய நினைத்தால், அதில் ஒருபோதும் பாஜக வெற்றிபெற முடியாது என கூறினார்.

“பரந்தூர் விமான நிலைய பிரச்னையில் முதல்வருக்கு விஜய் வைத்த செக்“

செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய விஜய், பரந்தூர் விமான நிலைய பிரச்னை குறித்து பேசினார். பரந்தூர் தொடர்பாக முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதியிருப்பதாக குறிப்பிட்ட விஜய், பரந்தூர் பகுதியில் விளை நிலங்களை அழித்துவிட்டு விமான நிலையம் கட்டுவதை எதிர்த்து அந்த மக்கள் வருடக்கணக்காக போராட வந்தனர். அவர்களை நேரில் சென்று சந்தித்து வந்தேன் என கூறினார்.

அவர்களை தான் சந்தித்துவிட்டு வந்த மறுநாளே, 1500 குடும்பங்கள் மட்டுமே அங்கே இருப்பதால் தான், அங்கே மக்கள் பாதிக்காத வண்ணம் விமான நிலையம் அமைப்பதாக முதலமைச்சர் அறிக்கை விட்டதாக சுட்டிக்காட்டினார்.

ஒன்று, அங்கு விமான நிலையம் இருக்கு என்று சொல்லுங்கள், அல்லது இல்லை என்று சொல்லுங்கள், 1500 குடும்பங்கள் என்றால் உங்களுக்கு சாதாரணமாக போய்விட்டதாக என்று முதலமைச்சரக்கு விஜய் கேள்வி எழுப்பினார்.

அந்த மக்களும் நம் மக்கள்தானே.? எதிர்க்கட்சியாக இருந்தால் மட்டும்தான் உங்களுக்கு மக்கள் மீது அக்கறை இருக்குமா எனவும் முதலமைச்சருக்கு கேள்வி எழுப்பினார். இப்படி இருக்கையில், மக்களின் முதல்வர் என்று எப்படி நாக்கு கூசாமல் சொல்கிறீர்கள் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விமர்சித்தார்.

தொடர்ந்து, பரந்தூருக்கு முதலமைச்சர் ஏன் இன்னும் செல்லவில்லை என கேள்வி எழுப்பிய தவெக தலைவர் விஜய், உடனடியாக அங்குள்ள மக்களை முதலமைச்சர் சென்று சந்திக்க வேண்டும் என்றும், அவர்களிடம், அங்கு விமான நிலையம் வராது என உறுதி அளிக்க வேண்டும் என்றும் கூறி செக் வைத்தார்.

அப்படி செய்யாவிட்டால், தானே சென்று அங்குள்ள மக்களை அழைத்துக்கொண்டு, தலைமைச் செயலகம் வந்து முதலமைச்சரை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று விஜய் கூறினார்.

இதற்கு முதலமைச்சர் என்ன எதிர்வினையாற்றப் போகிறார் என்பதே மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பு.