தமிழக வெற்றிக் கழகத்தின் ராயபுரம் எம்.எல்.ஏ., விஜய் தாமு வாளால் கேக் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Continues below advertisement

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சி தலைவர் விஜய் நாளை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க விஜய் 2 வார கால அவகாசம் கேட்டிருக்கிறார். 118 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கடிதம் தேவைப்படும் நிலையில் விஜய் சேர்த்து மொத்தம் 107 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதனால் மீதமுள்ள இடங்களில் பிற கட்சிகளின் ஆதரவை விஜய் நாடியுள்ளார். 

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் அவரது தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சென்னை ராயபுரத்தில் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் அத்தொகுதி தவெக எம்.எல்.ஏ., விஜய் தாமு, தவெக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் விஜய் தாமுவுக்கு வீரவாள் பரிசளிக்கப்பட்டது. அதனைக் கொண்டு அவர் கேக்கை வெட்டினார். அப்போது சுதாரித்த லயோலா மணி விஜய் தாமுவை தடுத்துள்ளார். அதற்குள் 2 முறை தாமு அந்த கேக்கை வாள் கொண்டு வெட்டினார். 

Continues below advertisement

இந்த நிலையில் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இப்படியான அட்ராசிட்டி எல்லாம் தேவையா என பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள், ஆதரவாளர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் விஜய் தாமுவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். 

ஒரு பதிவில், “விஜய் தாமு அவர்களே, உங்களை அந்த இடத்திற்கு அனுப்ப தெரிந்த எங்களுக்கு அடுத்த நிமிடம் கீழே இறக்கி விடவும் தெரியும்!! ஆணவத்தால் தான் திமுகவிற்கு இந்த நிலை… நினைவில் வைத்து கொள்ளவும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மற்றொரு பதிவில், “வாளால் கேக் வெட்டுவது சட்டப்படி குற்றம்! இது யார் செய்தாலும் தவறு தான். லாயோலா மணி சொல்லியும் பண்ணிற்கிங்க ரொம்ப தப்பு. இதை நாங்க வன்மையா கண்டிக்கிறோம். இனி யாரும் இந்த இப்படி பண்ணி கட்சியோட மானத்தை வாங்கதிங்க பிளீஸ்” என சொல்லப்பட்டிருக்கிறது. 

இன்னொருவர் விஜய் தாமு தயவு செய்து இனி எக்காலத்திலும் இது போன்ற தவறினை நீங்கள் செய்ய கூடாது.நீங்கள் செய்யும் ஒவ்வொன்றும் நம் கட்சிக்கு பலத்தை மற்றுமே சேர்க்கவேண்டும் தவிர அவப்பெயர்களை வாங்கி தரக்கூடாது.மக்கள் நம்மை மாற்றத்திற்காக தேர்ந்தெடுத்துள்ளனர். நாம் இதுபோல செய்யக்கூடாது எனவும், மற்றொருவர் உங்களை அந்த இடத்திற்கு அனுப்ப தெரிந்த எங்களுக்கு அடுத்த நிமிடம் கீழே இறக்கி விடவும் தெரியும்!! ஆணவத்தால் தான் திமுகவிற்கு இந்த நிலை… நினைவில் வைத்து கொள்ளவும்” என தெரிவித்துள்ளார்.