2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ள திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் வாக்கு சதவிகிதமும் ஆட்டம் கண்டுள்ளது. இவற்றுக்கெல்லாம் தமிழக வெற்றிக் கழகம் என்ற ஒரு கட்சி தான் காரணமாக அமைந்துள்ளது. 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. கடந்த மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் புதிதாக களம் கண்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டியானது நிலவியது. இதில் யாரும் எதிர்பாராத வகையில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணி 73 இடங்களையும், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் வென்றிருக்கிறது. இந்த நிலையில் இந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதத்தைப் பற்றிக் காணலாம். 

  • 2026 தேர்தல் முதல் முறையாக களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று 34.92% வாக்குகளைப் பெற்றுள்ளது. அக்கட்சிக்கு மொத்தமாக 1,72,26,209 ஓட்டுகள் கிடைத்துள்ளது. 
  • இரண்டாம் இடத்தில் திமுக 176 இடங்களில் போட்டியிட்டது. அக்கட்சி 59 இடங்களில் வென்று சுமார் 1,19,29,144 வாக்குகளைப் பெற்றுள்ளது. 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக 37.70 சதவிகிதமும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் 26.93 சதவிகிதம் வாக்குகளையும் பெற்றது. 
  • 3வதாக உள்ள அதிமுக 2021 தேர்தலில் 33.29% வாக்குகளையும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் 20.46% வாக்குகளையும் பெற்றிருந்த நிலையில் இம்முறை 21.21% வாக்குகளை அள்ளியுள்ளது. அதிமுக 172 இடங்களில் போட்டியிட்டு 47 தொகுதிகளில் வென்றுள்ளது. அக்கட்சிக்கு 1,04,62,146 வாக்குகள் கிடைத்திருக்கிறது. 
  • நாம் தமிழர் கட்சி 4ம் இடத்தில் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்து சுமார் 19,72,537 வாக்குகளை பெற்றிருக்கிறது. அக்கட்சி கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் 8.10% வாக்கு பெற்று மாநில கட்சி அந்தஸ்தை பெற்ற நிலையில் அது பாதியாக சரிந்துள்ளது. 
  • அதேசமயம் காங்கிரஸ் இந்த தேர்தல் 3.37 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றுள்ளது. அக்கட்சி 28 தொகுதிகளில் போட்டியிட்டு 5ல் வென்றுள்ளது. 
  • பாஜக 27 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் மட்டும் வென்றுள்ளது. அக்கட்சி 2.97% வாக்குகளை பெற்றிருக்கிறது. 
  • விடுதலை சிறுத்தைகள் கட்சி இம்முறை 1.09% வாக்குகளையும், தேமுதிக 1.29% வாக்குகளும் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • பாட்டாளி மக்கள் கட்சி 18 இடங்களில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வென்று 2.37 சதவிகித வாக்கை பெற்றுள்ளது. 
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 0.66%, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 0.60%, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 0.29% வாக்குகள் கிடைத்துள்ளது. அமமுக ஒரு தொகுதியில் வென்ற நிலையில் அக்கட்சி 1.09% வாக்குகளை கைப்பற்றியுள்ளது.
  • அதேபோல் நோட்டாவுக்கு இந்த தேர்தல் 1,99,801 வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த முறை தவெக என்னும் அலையில் சிக்கி திமுக தொடங்கி வெற்றி பெற்ற அனைத்து கட்சிகளின் வாக்குகளும் சரிந்தது.