விழுப்புரம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம் சார்பில் கார்த்திகை தீப திருவிழாவிற்கு 4089 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.


பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் டிசம்பர் 4ம் தேதி தங்க கொடிமரத்தில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. டிசம்பர் 13 காலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோவிலின் கருவறை முன்பு பரணி தீபமும் மாலை ஆறு மணிக்கு திருவண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.


கார்த்திகை தீபத் திருநாள் - சிறப்பு பேருந்துகள் இயக்கம்


திருவண்ணாமலை அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருநாள் 13.12.2024 அன்று வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டும் 14.12.2024 அன்று பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும் 12.12.2024 வியாழக்கிழமை முதல் 15.12.2024 ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் மேற்கண்ட நாட்களில் 4089 சிறப்பு பேருந்துகள் மூலம் 10110 நடைகள் இயக்கப்பட உள்ளது.


150 தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கிட நடவடிக்கை


மேலும், திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து கிரிவலப்பாதையை இணைக்கும் வகையில் 40 சிற்றுந்துகள் கட்டணமில்லாமல் இயக்குவதற்கும், அரசின் வழிகாட்டுதலின்படி கடந்த தீபாவளி பண்டிகையின் போது பயணிகளின் வசதிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கியது போல், தீபம் சிறப்பு பேருந்து இயக்கத்தின் போதும் 150 தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.


அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை)லிட் சார்பில் 300பேருந்துகள் இயக்கம்


திருவண்ணாமலையில் திருகார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டலங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட்., மேலாண் இயக்குநர் செய்திக்குறிப்பில், திருவண்ணாமலை திருகார்த்திகை தீப திருவிழா 2024 பண்டிகை 13.12.2024 அன்று வருவதை முன்னிட்டு பொது மக்கள் அதிகளவில் திருவண்ணாமலைக்கு பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


எனவே பயணிகளின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை)லிட்., மதுரை போக்குவரத்துக்கழக மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மண்டலங்கள் மூலம் வழக்கமான வழித்தட பேருந்துகளும் மற்றும் சிறப்பு பேருந்துகளும் திருவண்ணாமலை திருகார்த்திகை தீப திருவிழாவிற்கு 12.12.2024 முதல் 15.12.2024 வரை 300 பேருந்துகள் பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


இப்போக்குவரத்துக் கழகம் மூலம் திருவண்ணாமலை திருகார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சென்று வர பயணிகள் சிரமமின்றி பயணிக்கவும், முன்பதிவில்லா பேருந்துகளுக்காக காத்திருப்பதை தவிர்க்கவும், பயணிகளின் கடைசி நேர கூட்ட நெரிசலையும், கால நேர விரயத்தையும் தவிர்க்கும் பொருட்டு அரசு (OTRS) https://www.tnstc.in. TNSTC Mobile App செயலி மற்றும் இணைய சேவை மையம் வழியாக 3X2 Deluxe பேருந்துகளின் முன்பதிவு செய்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.