மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெ. சண்முகத்திற்கு முதல் ஆளாக தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


விஜய்யின் அரசியல் நுழைவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி, விழுப்புரம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. கட்சியின் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட கொள்கைகளும், விஜய்யின் உரையும் மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பின.



கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் தவெக:


திமுக, பாஜக எதிர்ப்பை நேரடியாக கையில் எடுத்துள்ள விஜய், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக குறித்து இதுவரை ஒரு விமர்சனம் கூட வைக்கவில்லை. அதோடு, பாமக, விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் மீதும் விமர்சனம் வைக்காமல் தவிர்த்து வருகிறார்.


இது, கூட்டணிக்கான அச்சாரமா என கேள்விகள் எழுந்து வருகின்றன. பலமான திமுகவை எதிர்க்க வேண்டுமானால், கட்சி கட்டமைப்பு வலுவாக இருக்க வேண்டும். அதோடு, சரியான கூட்டணி அமைய வேண்டும். அந்த வகையில், விசிகவை கூட்டணியில் இழுக்க தவெக சார்பில் பல்வேறு முயற்சிகளை எடுக்கப்பட்டன.


அம்பேத்கர் புத்தகம் தொடர்பான விருது வழங்கும் விழா தமிழக அரசியலை புரட்டி போட்டது. முதலில், விஜய் உடன் விசிக தலைவர் திருமாவளவன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்ததார். ஆனால், பல்வேறு காரணங்கள் காரணமாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார் திருமா.


முதல் ஆளாக வாழ்த்து சொன்ன விஜய்:


திமுக கொடுத்த அரசியல் அழுத்தம் காரணமாகவே அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என கூறி நிகழ்ச்சி மேடையிலேயே பூகம்பத்தை கிளப்பினார் விஜய். ஆனால், அதற்கு திருமாவே மறுப்பு தெரிவித்துவிட்டார்.


இந்த விவகாரம் சற்று ஓய்ந்துள்ள நிலையில், தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெ. சண்முகத்திற்கு முதல் ஆளாக தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


எக்ஸ் தளத்தில் விஜய் இதுகுறித்து குறிப்பிடுகையில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பெ. சண்முகத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


பொதுவுடைமைப் பாதையில் ஏழை, எளிய மக்களுக்காகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த, போற்றுதலுக்குரிய தங்களின் பணி, வரும் காலங்களிலும் சமரசமின்றித் தொடரட்டும்" என பதிவிட்டுள்ளார்.