தமிழ்நாட்டில் அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடு பிடித்திருப்பதற்கு முக்கிய காரணம் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட இவரது தமிழக வெற்றிக் கழகம் வரும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

விஜய்யை அட்டாக் செய்யும் சீமான்:

விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவருக்கு மிகப்பெரிய ஆதரவை அளித்து வந்த சீமான், அவரது வருகைக்கு பின்பு அவர் தமிழ் தேசியமும், திராவிடமும் எனது இரு கண்கள் என்று கூறிய பிறகு அவரை மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக, தற்போது திராவிட கட்சிகளை காட்டிலும் விஜய் மீது அதிகளவு விமர்சனத்தை முன்வைத்து வருகிறார். 

ரஜினி, அஜித்தை புகழ்ந்த சீமான்:

விஜய்க்கு திருச்சியில் வந்த கூட்டத்தை காட்டிலும் ரஜினிகாந்த், அஜித்திற்கு அதிக கூட்டம் வரும் என்று பேசினார். விஜய்யைப் போன்ற உச்ச நட்சத்திரங்களான அஜித்தையும், ரஜினியையும் விஜய்யை குறைத்து மதிப்பிடுவதற்காக அவர்களை ஒப்பிட்டு பேசினார். இதையே தற்போது விஜய் ரசிகர்கள் சீமானுக்கு எதிரான அஸ்திரமாக மாற்றி வருகின்றனர். 

பழைய வீடியோக்களை வைரலாக்கும் விஜய் ரசிகர்கள்:

சீமான் தனது தொடக்க கால அரசியல் களத்தில் பெரும்பாலானோரை மிக கடுமையாக விமர்சித்து பேசினார். குறிப்பாக, ஒருமையில் பேசினார். அந்த வீடியோக்கள் தற்போது பகிரப்பட்டு சீமானுக்கு கேள்விகளை தவெக தொண்டர்கள் எழுப்பி வருகின்றனர். சீமான் பல ஆண்டுகளுக்கு முன்பு அஜித் பற்றி பேசிய வீடியோவில், அஜித்தை சிலர் தருதலைகள் தல, தல என்று சொல்கிறார்கள் என்று பேசியதும், ரஜினிகாந்த் தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்று கூறியதற்கு சுடுகாட்டில் கூட வெற்றிடம் இருக்கிறது என்று சீமான் பேசியதையும் தற்போது வைரலாக்கி வருகின்றனர். 

மேலும், விஜய்யை யார் அரசியலுக்கு அழைத்தது? என்ற சீமான் பேசியதற்கும் விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்பு என் தம்பி விஜய் 2026 தேர்தலுக்கு வருவான் என்று சீமான் பேசியதையும் பதிவிட்டு பதிலாக தவெக தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர். 

சீமானின் வாக்கு வங்கிக்கு ஆபத்து?

விஜய் அரசியலுக்கு வந்தால் அவருடன் கூட்டணி வைத்து தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கணக்கிட்ட சீமானுக்கு, விஜய் தனது கொள்கைத் தலைவராக பெரியாரை கூறியது மிகப்பெரிய அதிருப்தியை உண்டாக்கியது. மேலும், கட்சி தொடங்கிய பிறகு விஜய் கூட்டணிக்கு வெளிப்படையாக அழைத்தது திருமாவளவனை மட்டுமே ஆகும்.

சீமான் பற்றிய விமர்சனங்களுக்கு அவர் தனது பேச்சில் கூட பதிலளிக்காமல் தவிர்த்து வருகிறார். மேலும், விஜய் தனக்கு போட்டி திமுக மட்டுமே என்றும் மீண்டும் மீண்டும் தனது பேச்சில் பதிவு செய்து வருகிறார். இதுவும் சீமானின் மிகப்பெரிய அதிருப்திக்கு காரணமாக கருதப்படுகிறது.