தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அதாவது நவம்பர் 1ஆம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தீபாவளி (Deepavali, Diwali) திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாகக் கருதப்படுகிறது. இது இந்து, சீக்கியம், சைனம் மற்றும் பௌத்தம் மதங்களின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா இலங்கை சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி வியாழக்கிழமை அன்று வருவதால், அடுத்த நாளான வெள்ளி அன்று அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்களும் மாணவர்களும் கோரிக்கை விடுத்தனர். சொந்த ஊர்களுக்குச் சென்று வர ஏதுவாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்த ஆண்டு தீபாவளியை 31.10.2024 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 01.11.2024 அன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்தும் அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இந்த விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 09.11.2024 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
4 நாட்களுக்குத் தொடர் விடுமுறை
இதன் மூலம் தீபாவளி நாளான அக்டோபர் 31 வியாழக்கிழமை, நவம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை, அடுத்த நாளான சனிக்கிழமை, வார விடுமுறை ஞாயிற்றுக் கிழமை ஆகிய 4 நாட்களுக்குத் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் அரசு ஊழியர்களும் மாணவர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
அகவிலைப்படி 3% உயர்வு
முன்னதாக, தீபாவளி பண்டிகையை ஒட்டி அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு அகவிலைப் படியை 3 சதவீதம் உயர்த்தி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.