விழுப்புரம் : தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு 27 ஆம் தேதி நடத்துவதற்கு அனுமதி கோரி விழுப்புரம் எஸ் பி அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என் ஆனந்த் மனு அளித்தார். திட்டமிட்டப்படி 27 ஆம் தேதி மாநாடு நடைபெறும் என திட்டவட்டமாக ஆனந்த் கூறியுள்ளார். 


 


தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு 27 ஆம் தேதி வி.சாலையில் நடைபெறுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்றைய தினம் 20 ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார். ஏற்கனவே செப்டம்பர் 23 ஆம் தேதி மாநாடு நடத்துவதற்கு அனுமதி பெறப்பட்டபோது 33 நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாநாடு நடத்த வேண்டுமென காவல் துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. அதன் பின்னர் மேடை அமைப்பதற்கு போதிய நாட்கள் இல்லை என்பதாலும், விஜய்யின் கோட் திரைப்படம் வெளியானதால் மாநாடு தேதி தள்ளி போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு 27 ஆம் தேதி மாநாடு நடத்த விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டதால் இன்று அக்கட்சியின் பொதுசெயலாளர் என் ஆனந்த் தலைமையிலான தமிழக வெற்றி கழக விழுப்புரம் மாவட்ட பொறுப்பு தலைவர் பரணிபாலாஜி, வழக்கறிஞர்கள் மாநாட்டிற்கு 27 ஆம் தேதி அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்ககோரி விழுப்புரம் எஸ் பி அலுவலகத்தில் ஏடி.எஸ்.பி திருமாலிடம் மனு அளித்தனர். அதனை தொடர்ந்து பேட்டியளித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் மாநாட்டிற்கான பந்தல் அமைக்கும் பணி ஒரு வாரத்தில் தொடங்கப்படுமெனவும், கண்டிப்பாக அறிவித்தப்படி 27 ஆம் தேதி மாநாடு நடைபெறும் என்றும் மாநாட்டில் யார் கலந்து கொள்வார்கள் என்பது குறித்து கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பார் என திட்டவட்டமாக தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுசெயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார். 


தமிழக வெற்றிக்கழக மாநாடு


தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், கட்சியின் முதல் மாநில மாநாட்டை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அருகேயுள்ள வி.சாலை பகுதியில் இம்மாதம் 23-ந் தேதி நடத்த இருப்பதாக முடிவு செய்திருந்தனர். 


இம்மாநாட்டுக்காக காவல்துறை விதித்த நிபந்தனைகளை நடைமுறைப் படுத்துவதில் குறிப்பிட்ட நாட்கள் தேவைப்படும் என்பதால், ஏற்கனவே முடிவு செய்த தேதியில் மாநாட்டை நடத்துவது சிரமம் என்பதால் தேதி தள்ளிப்போனது. தொடர்ந்து, மாநாட்டை எந்த தேதியில் நடத்தலாம் என்று கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வந்தார்.


நடிகர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு


இந்நிலையில் நீண்ட ஆலோசனைக்குப்பிறகு தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் அக்டோபர் 27-ந் தேதி நடத்தப்படும் என்று நேற்று காலை நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த செய்தியை அக்கட்சியினர் மற்றும் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.


ஏற்கனவே செப்டம்பர் 23-ந் தேதி மாநாடு நடத்துவதற்காக காவல்துறையிடம் அக்கட்சியினர் அனுமதி பெற்றிருந்த நிலையில் தற்போது மாநாடு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளதால் அந்த தகவலை மீண்டும் கடிதம் மூலம் விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் கொடுத்து அனுமதி பெற வேண்டும். அதற்கான ஏற்பாட்டில் தமிழக வெற்றிக்கழகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், ஓரிரு நாளில் காவல் துறையின் அனுமதி கேட்டு மனு கொடுக்க உள்ளனர்.


மாநாடுக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல்


ஆனால் மாநாடு நடைபெறுவதாக அறிவித்துள்ள தேதியில் இருந்து 3 நாட்கள் கழித்து தீபாவளி பண்டிகை வருகிறது. அதுபோல் மாநாடு நடத்தப்போவதாக குறிப்பிட்டுள்ள நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகும். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாளில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அது மட்டுமின்றி தீபாவளி பண்டிகை காலம் என்பதால் வழக்கத்திற்கும் மாறாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து இன்னும் அதிகமாக இருக்கும். வெளியூர்களில் தங்கியிருந்து படித்து வருபவர்கள், பணியாற்றி வருபவர்கள், தீபாவளி பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட சொந்த ஊருக்குச் செல்வார்கள். சாதாரணமாக வார விடுமுறை நாட்களில் சுமார் இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர் வரை விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் குறிப்பாக பண்டிகை நாட்களில் சென்னை பகுதியில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோரை எண்ணிக்கை அதிகரிக்கும் இதனால் நீண்ட தூரம் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.


இப்படிப்பட்ட சூழலில் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும். அதனால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை சரிசெய்வது, மாநாட்டுக்கு வருபவர்களை சமாளித்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது என்பது போலீசாருக்கு பெரும் சிக்கல் தான். இதனை கருத்தில் கொண்டு விஜய் அறிவித்துள்ள தேதியில் மாநாடு நடத்த காவல்துறை அனுமதி வழங்குவதில் சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது.