TVK Vijay: பரந்தூர் விமான நிலைய  எதிர்ப்பு போராட்டக் குழுவினர் உடனான, தவெக தலைவர் விஜயின் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


பரந்தூர் மக்களை சந்திக்கும் விஜய்:


காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதேநேரம், இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரமே அழிந்துவிடும் என ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த, மக்கள் இன்றுடன் சேர்த்து 910வது நாளாக தொடர்ந்து போராடி வருகின்றனர். பல்வேறு வழிகளிலும் தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஏராளமான அரசியல் கட்சி தலைவர்களும் அப்பகுதி மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், அரசு அந்த திட்டத்தை கைவிடும் எண்ணத்தில் இல்லை. இந்நிலையில் தான், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று பரந்தூர் மக்களை சந்திக்க உள்ளார்.



கடும் கட்டுப்பாடுகள்:


பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை சந்திக்க அனுமதி கோரி, தவெக சார்பில் காவல்துறையிடம் அனுமதி வழங்கப்பட்டது. அதனை பரிசீலித்த காவல்துறை, ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தான் போராட்டக்குழுவினரை சந்திக்க வேண்டும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும், அதிகப்படியான நபர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள், குறிப்பிட்ட கால அளவில் மட்டுமே சந்திப்பு நிகழ வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தனர். இதைதொடர்ந்து, தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் உள்ளிட்டோர் பரந்தூருக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். மறுபுறம் நிர்வாகிகள் பொதுமக்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகளை கேட்டறிந்து தலைமைக்கு அறிக்கையாக வழங்கினர்.


ஒருமணி நேரம் மட்டுமே அனுமதி: 


இதனிடையே, போராட்டக்குழுவினரை விஜய் திறந்தவெளியில் சந்திக்க அனுமதி கோரி, தவெகவினர் காவல்துறையிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகும், குறிப்பிட்ட தனியார் மண்டபத்தில் மட்டுமே, போராட்டக்குழுவினரை விஜய் சந்திக்க வேண்டும் என காவல்துறையினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதன்படி, இன்று பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை, பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் போராட்டக்குழுவினரை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்திக்க உள்ளார்.


களத்தில் விஜய்:


கடந்த ஆண்டு யாரும் எதிர்பாராத நேரத்தில் விஜய் தனது அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதனை தொடர்ந்து பிரமாண்ட மாநாடு ஒன்றையும் விழுப்புரத்தில் நடத்தினார். இருப்பினும் கட்சி தொடங்கிய பிறகு, அவர் மக்களை சந்திக்கவே இல்லை என்ற குற்றச்சாட்டும், விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்தன. இந்நிலையில் தான், விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 910 நாட்களாக போராடி வரும் பரந்தூர் மக்களை விஜய் இன்று சந்திக்க உள்ளார். கட்சி தொடங்கிய பிறகு, விஜய் களத்திற்கு வந்து மக்களை நேரடியாக சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இது மாநில அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழக அரசின் கருத்து


இந்த ஏற்பாடு தொடர்பாக பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “
பரந்தூர் விமான நிலைய போராட்டக்குழுவினரைச் சந்திக்க விஜய் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் போகலாம். அங்கு அவர்களின் குறைகளை கேட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தால், அரசு அந்த குறைகளை நிச்சயம் ஆராயும். அவர் அங்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையம் தேவையான ஒன்றாக உள்ளது. அங்குள்ள மக்கள் பாதிக்காத வகையில் அவர்கள் மறு குடியமர்வுக்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது” என தெரிவித்தார்.