TVK Vijay: மாணவிகள் கவலை கொல்லாமல் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
தவெக விஜய் கடிதம்:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கைப்பட எழுதியுள்ள கடிதத்தில், “
அன்புத் தங்கைகளே!
கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்புப் பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆரளாகிறேன். யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்கை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம்.
எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன். அண்ணாவாகவும், அரணாகவும். எனவே அதை பற்றியும் கவலை கொல்லாமல் கல்வியில் கவனம் செலுத்துஙகள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவாம். அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்” என விஜய் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் மாநில அளவில் பேசுபொருளானது. இந்நிலையில், ஆளும் திமுக அரசிடம் வலியுறுத்தினாலும், பெண்கள் பாதுகாப்பிற்கு எந்த பலனும் இல்லை எனும் தொனியில் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
விஜய் வலியுறுத்தல்:
அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக ஏற்கனவே விஜய் வெளியிட்டு இருந்த டிவிட்டர் பதிவில், “ஒவ்வோர் ஆண்டும் ஒதுக்கப்படும் நிர்பயா நிதியைப் பயன்படுத்தி, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத இடங்களைக் கண்டறிந்து, அங்கு ஸ்மார்ட் கம்பங்கள் அமைத்தல், அவசர கால பட்டன்கள், சிசிடிவி கேமரா, தொலைபேசி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துதல், மாநகரப் பேருந்துகள் அனைத்திலும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்தல், பொது இடங்களில் பெண்களுக்கான கழிப்பறை வசதிகள், பெண்கள் பாதுகாப்புக்கான அவசர காலத் தொலைபேசி மற்றும் கைப்பேசிச் செயலி வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி, கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
இவை அனைத்தையும் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இவை முழுமையாகச் செயல்படுகின்றனவா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவற்றைச் செய்வதில் எவ்விதச் சமரசத்திற்கும் உடன்படாமல் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். எவ்விதச் சூழலிலும் பெண்கள் மனவலிமையுடன் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வது தொடர்பாகப் போதிய சட்ட உதவி மற்றும் உளவியல் சார்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம். இந்த விழிப்புணர்வை, பெண்களுக்கு அவர்கள் கல்வி பயிலும் காலக்கட்டத்திலேயே அரசு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்” என விஜய் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.