தமிழ்நாட்டில் ஆட்சியை அடுத்து கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிக்கப்போகும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாருடன் விஜய் கூட்டணி?
விஜய்யின் வருகையால் தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்று கருதப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பிறகு கடந்த சில மாதங்களாக பம்பரமாக சுழன்றி வந்த விஜய்க்கு கரூரில் நடந்த சம்பவம் பெரும் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் விஜய் மீது பல கட்சிகளும் கடும் விமர்சனத்தை முன்வைத்தபோது அதிமுக, பாஜக மிகப்பெரிய அளவில் ஆறுதலாக செயல்பட்டனர்.
இபிஎஸ் - விஜய் பேச்சு:
விஜய்யும் பின்னர் வெளியிட்ட வீடியோவில் தனக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் பேசிய தலைவர்களுக்கு நன்றி என்று கூறினார். இந்த சூழலில் அதிமுக- பாஜக கூட்டணியில் விஜய்யை கொண்டு வர தொடர்ந்து வேலைகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. விஜய்யிடம் எடப்பாடி பழனிசாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு தொலைபேசியில் பேசியதாகவும், கூட்டணி தொடர்பாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
எடப்பாடி - விஜய் ப்ளான் என்ன?
இந்த சூழலில், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் விஜய் அதிமுக கூட்டணிக்குள் வந்தால் பாஜக-வை எடப்பாடி கழட்டிவிடுவார் என்று கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியபோதே தவெக-வின் கொள்கை எதிரியாக பாஜக-வை விஜய் கூறினார். மேலும், ஒருபோதும் பாஜக-வுடன் கூட்டணி கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார்.
இந்த சூழலில் அதிமுக-வுடன் கூட்டணி சேர விஜய் தரப்பு வைக்கும் மிகப்பெரிய நிபந்தனை பாஜக-வை கழட்டிவிட வேண்டும் என்றே தகவல்கள் கூறப்படுகிறது. விஜய் தரப்பின் இந்த நிபந்தனையை எடப்பாடி பழனிசாமி ஏற்பாரா? என்ற கேள்வி அவர் முன் எழுந்துள்ளது.
இதுதான் ஸ்பெஷல்:
விஜய் அதிமுக பக்கம் வந்தால் இளைஞர்கள் வாக்குகள், முதல்தலைமுறை வாக்குகள் அதிமுக-விற்கு சாதகமாக விழும் என்றே கணிக்கப்படுகிறது. தற்போதுள்ள சூழலில், தவெக-வில் விஜய்யைத் தவிர எந்தவொரு தலைவரும் மக்கள் மத்தியில் பிரபலமானவராக தவெக-வில் இல்லை. மேலும், நெருக்கடியான சூழலில் விஜய்யை வழிநடத்தும், அறிவுரை கூறும் அளவிற்கு திறமையானவர்கள் இல்லை என்பதையே கரூர் சம்பவம் வெளிக்காட்டியது.
அதிமுக-வுடன் கூட்டணி சேரும்போது அவருக்கு அதிமுக தொண்டர்களின் ஆதரவும் கிட்டும். அதேசமயம் எடப்பாடி - விஜய் ஒரு பக்கம் இருக்கும்போது அனுபவசாலி, மூத்த அரசியல்வாதி என்ற அடிப்படையில் முதலமைச்சர் வேட்பாளரை எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுக்கொடுத்தாக வேண்டும்.
என்ன செய்வார் தளபதி?
இந்த சூழலில், அனுபவம் மிகுந்த அதிமுக-வுடன் விஜய் கூட்டணி சேர்வாரா? விஜய்க்காக எடப்பாடி பழனிசாமி பாஜக-வை கழட்டிவிடுவாரா? அல்லது கூட்டணிக்காக தனது கட்சியின் கொள்கையை முதல் தேர்தலிலே காற்றில் பறக்கவிட்டு அதிமுக - பாஜக கூட்டணியில் சேர்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
எதுவாகினும் அதிமுக - தவெக கூட்டணியை தீர்மானிப்பதில் பாஜக-வே முக்கிய பங்கு வகிக்கிறது. பாஜக-வுடன் அதிமுக கூட்டணி சேர்ந்திருப்பது அதிமுக-வின் கீழ்மட்ட தொண்டர்கள் பலருக்கும் அதிருப்தியான ஒன்றாகவே உள்ளது. ஏனென்றால், தமிழ்நாட்டில் பாஜக-விற்கு எதிரான ஒரு மனநிலை தொடர்ந்து இருப்பதும், கடந்த காலத்தில் எம்ஜிஆர் - ஜெயலலிதாவை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்து பேசியதும் முக்கிய காரணம் ஆகும்.
இதனால், எடப்பாடி பழனிசாமி பாஜக கையை உதறிவிட்டு விஜய்யுடன் கரம்கோர்ப்பாரா? அல்லது அதிமுக - பாஜக கரத்தை விஜய் கைப்பற்றுவாரா? என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.