அதிமுகவில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது தெரிந்ததுதான். ஆனால், இதில் யார் முந்துகிறார்கள் என்பதே எதிர்பார்க்கப்படும் விஷயம். அந்த வகையில், செங்கோட்டையன் சைலென்ட்டான நிலையில், எடப்பாடி பழனிசாமி தான் அதிரடி காட்டி வருகிறார்.

Continues below advertisement

கெடு விதித்துவிட்டு சைலென்ட்டான செங்கோட்டையன்

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அவ்வப்போது போர்க்கொடி தூக்கி பேசுபொருளான நிலையில், சமீபத்தில் சமாதானத் தூதுவராக மாறினார். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை இணைப்பேன் எனக் கூறி கிளம்பி, எடப்பாடி பழனிசாமிக்கே கெடு விதித்த அவர், தற்போது சைலென்ட் மோடில் உள்ளார்.

ஏற்கனவே, கெடு விதித்த அடுத்த நாளே செங்கோட்டையன் மற்றும் அவரது சில ஆதரவாளர்களின் பொறுப்புகளையும்  எடப்பாடி பழனிசாமி பறித்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது இல்லத்தில், ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், மறுபுறம், எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டி வருகிறார்.

Continues below advertisement

செங்கோட்டையன் ஆதரவாளர்களை தட்டித் தூக்கிய எடப்பாடி பழனிசாமி

செங்கோட்டையன் விஷயத்தில் ஏற்கனவே எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் அவரது ஆதரவாளர்கள் 40 பேரை கட்சியை விட்டு தூக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

அதன்படி, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், குறிப்பாக கோபிசெட்டிபாளைய நிர்வாகிகளின் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் 40 பேரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தில் பல்வேறு ஒன்றியங்கள், நகரங்கள், பேரூராட்சிகளில் முக்கிய பொறுப்பு வகித்து வந்தவர்கள். இந்த நடவடிக்கை, செங்கோட்டையனுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கே.கே. கந்தவேல்முருகன், இணைச் செயலாளர் பி. அனுராதா, மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளர் எஸ்.ஆர். செல்வம், இணைச் செயலாளர் கே.பி. சிவசுப்பிரமணியம் அகியோர் கட்சிப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, நீக்கப்பட்ட அனைவருமே முக்கிய பொறுப்பு வகித்தவர்கள்தான்.

பலிக்காமல் போன செங்கோட்டையனின் முயற்சி

10 நாட்களில் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைக்கும் நடவடிக்கையை எடுக்காவிட்டால், அந்த பணியை நான் செய்வேன் என கிளம்பிய செங்கோட்டையனின் பாச்சா எடப்பாடி பழனிசாமியிடம் பலிக்கவில்லை.

செங்கோட்டையனின் கருத்துக்கு, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், முக்கியமாக அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய எடப்பாடி பழனிசாமி, இன்னும் அடம்பிடித்துக்கொண்டே தான் இருக்கிறார். அவர்கள் யாரையும் சேர்க்க முடியாது என்பதில் உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, அதிரடி நடவடிக்கைகளையும் அவர்களுக்கு எதிராக எடுத்து வருகிறார்.

எதுவுமே செய்யாத ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன்

இதனால், அதிமுகவில் சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றாகிவிட்டது. இந்த சூழலில், செங்கோட்டையனால் இனி என்ன செய்ய முடியும் என்ற கேள்வியே மிஞ்சுகிறது. இன்னொரு பக்கம், ஓபிஎஸ் ஏற்கனவே ஓரம்கட்டப்பட்டு விட்டார். சசிகலா வெளியே வந்த உடன் ஏதாவது செய்துவிடுவார் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், அவர் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார். டிடிவியின் கதையும் அதேதான்.

இப்படி இருக்கும்போது, செங்கோட்டையன் மட்டும் முயற்சி செய்தால் என்ன நடக்கும்.? தற்போது அவர் கட்சியிலும் இல்லை. இதனால், இனி அதிமுகவில் எடப்பாடி ராஜ்ஜியம் தான் என்பது உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.