உடன்குடியில் கட்டப்பட்டு வரும் அனல் மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டால் தமிழ்நாடு அரசின் நிதிநிலைமை மேலும் மோசமடையக் கூடும் என க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான்ஸ் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. அந்த ஆய்வின்படி
உடன்குடி ஸ்டேஜ் 1 & ஸ்டேஜ் 2 மின் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு அரசின் கடன் மேலும் 20,000 கோடி ரூபாய் வரை அதிகரிக்கும். இதன் மூலம் நுகர்வோருக்கான மின் கட்டணம் உயரக்கூடும். அல்லது மாநில அரசு மின் வாரியத்திற்கு அளிக்கும் மானியங்களை அதிகரிக்க இந்தத் திட்டம் வழிவகுக்கும் என கூறப்பட்டுள்ளது
இதுபோன்ற நிலக்கரி அனல்மின் நிலைய திட்டங்களைத் தொடர்வதற்குப் பதிலாக மின்கல சேமிப்புடன் கூடிய பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் ஈடுபட்டால், 2024ஆம் ஆண்டு முதல் 2030ஆம் ஆண்டு வரையிலான ஆறு ஆண்டு காலத்தில் தமிழ்நாடு அரசால் 15 முதல் 20,000 கோடி ரூபாய்வரை மிச்சப்படுத்த முடியும் என க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான்ஸ் மேற்கொண்ட “White Elephants – New Coal Plants Threaten Tamil Nadu’s Financial Recovery” எனும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
உப்பூரில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த 1600 (2 × 800) மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையத் திட்டம் சட்டரீதியாக பல தடைகளை எதிர்கொண்டதால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் அத்திட்டத்தை உடன்குடிக்கு மாற்றுவது குறித்து பரிசீலித்து வருகிறது. ஏற்கெனவே உடன்குடியில் 600 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அனல்மின் நிலையங்களை அமைக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன. இவ்விரண்டுமே 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே முன்மொழியப்பட்ட திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்ற கடந்த சில மாதங்களில் தமிழ்நாட்டின் சிக்கலான நிதி நிலையை சரிசெய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தப் புதிய அனல்மின் நிலையத்தால் ஏற்படக்கூடிய நிதி நிலை சிக்கல் குறித்து எச்சரிப்பது மிகவும் அவசியமாகும் எனவும் அந்த அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டின் நிதிநிலை சிக்கல் குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கெனவே வெள்ளை அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவாக விளக்கியுள்ளார். தமிழ்நாட்டின் நிதிநிலையை மீட்டெடுக்க பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நிதிநிலைச் சிக்கலில் கவலைக்குரியது மாநிலத்தில் நிலுவையில் உள்ள கடன் உத்தரவாதங்கள்தான். அவற்றில் பெரும்பாலானவை மின் துறையிலேயே உள்ளன. இந்த நிலைமையை உடன்குடி அனல்மின் நிலையத் திட்டங்கள் மேலும் மோசமாக்கும் என க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான்ஸ் தனது அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளது. தற்போது மாநிலத்திற்கு மலிவான விலையில் மின்சாரம் கிடைப்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்ற நிலையில் உடன்குடி அனல்மின் நிலையங்களில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்திற்கான செலவு மிக அதிகமாகும்.
இதுகுறித்து இந்த ஆய்வறிக்கையின் இணை எழுத்தாளரும் க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான்ஸ் அமைப்பின் மூத்த ஆய்வாளருமான ஆஷிஷ் பெர்ணாண்டஸ் கூறும்போது, “ கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்சாரத்துறையில் பொருளாதாரம் வியக்கத்தக்க முறையில் மாறியுள்ளது. நிலக்கரி அனல்மின் நிலையங்களிலிருந்து உற்பத்தியாகும் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ. 6.7 முதல் ரூ. 8.2 வரை செலவாகிறது. ஒப்பீட்டளவில் பார்த்தால் மின்கல சேமிப்பகத்துடன் கூடிய பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க மின்சாரம் தற்போது யூனிட் ஒன்றுக்கு ஐந்து ரூபாய்க்கும், தனித்த பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க மின்சாரம் மூன்று ரூபாய்க்கும் குறைவாக கிடைக்கிறது.
இந்த விலையானது 2025ஆம் ஆண்டில் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு பத்தாண்டுகளின் இறுதிக்குள் உருவாகும் கூடுதல் மின் தேவையை மின்கலத்துடன் கூடிய பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பெற்றால் 2024 முதல் 2030ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 15 முதல் 20,000 கோடிகளை மாநில அரசு சேமிக்க முடியும்” எனத் தெரிவித்தார்.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் தெரிவிக்கையில் “ தமிழ்நாட்டில் நீண்ட காலமாக கண்டுகொள்ளாமல் விடப்பட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக திராவிட முன்னேற்றக் கழக அரசு தெரிவித்துள்ளது. இது எந்த அளவிற்கு முக்கியமானதோ அதே அளவிற்கு மாசு ஏற்படுத்தும் புதிய திட்டங்களை உருவாக்காமல் இருப்பதும் முக்கியமாகும். க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான்ஸ் மேற்கொண்டுள்ள இந்த ஆய்வு, புதிய நிலக்கரி அனல் மின் நிலையங்களை அமைப்பது சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானவை மட்டுமல்ல மாநிலத்தின் நிதி ஆதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை நிரூபிப்பதாக இருக்கிறது. மேலும் அனல்மின் நிலையங்களை சுற்றி வாழும் மக்களுக்கு சுகாதார சீர்கேடும் வாழ்வாதார பாதிப்புகளும் நேர்கின்றன. அண்மையில் நிகழ்ந்த நிலக்கரி விநியோக நெருக்கடியானது தமிழ்நாட்டின் எரிசக்தி ஆற்றல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்ததை நாம் பார்த்திருக்கிறோம்" என்று கூறினார்.
2015ஆம் ஆண்டில் இருந்து மாநிலத்தின் நிறுவப்பட்ட மின் உற்பத்தி திறன் அதிகரித்து இருந்தாலும்கூட தமிழ்நாட்டின் மின் தேவை வளர்ச்சி (2.8% p.a.) என்பது அதிகாரப்பூர்வ கணிப்புகளைவிட (5.2% p.a.) இருந்து பின்தங்கியே உள்ளதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனல்மின் நிலையங்களின் மின்னுற்பத்தித் திறனைக் குறிப்பிடும் Plant Load Factors (PLF) என்பது கடந்த 3 ஆண்டுகளாக 60% அல்லது அதற்கும் குறைவாகவே இருந்து வருகிறது. இதன் விளைவாக உடன்குடி Stage 1&2 அனல்மின் நிலையங்கள் தன் மொத்த உற்பத்தித் திறன் அளவிற்கு செயல்படாமல் இருக்கும் என்பதோடு, நிலையான விலை நிர்ணயம் மற்றும் கடனைத் திருப்பி செலுத்துதல் போன்றவற்றால் மாநிலத்தின் நிதிச்சுமையை அதிகரிக்கச் செய்யும். இந்த இரண்டு திட்டங்களுக்கும் ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கு வருடாந்திரமாக 5000 கோடி ரூபாயை செலவழிக்க வேண்டும். 2024-2030 வரையிலான காலத்தில் இது கிட்டத்தட்ட 29,000 கோடி ரூபாயாக இருக்கும்.
2021ஆம் ஆண்டு ஜூலைவரை உடன்குடி அனல்மின் நிலையம் stage 1 &2க்கு ரூபாய் 6,155 கோடி செலவாகியுள்ளது. இந்த நிலையிலேயே இத்திட்டத்தை கைவிட்டுவிட்டால் திட்டத்தை தொடர்வதன் மூலம் 2030களில் ஏற்படப்போகும் மிகப்பெரிய நிதிச்சுமையை தவிர்க்க முடியும் என இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
முழு அறிக்கைக்கு : https://climateriskhorizons.com/research/Report_WhiteElephantsTamilNadu.pdf
தொடர்புக்கு:
ஆஷிஷ் பெர்ணாண்டஸ், <ashish.fernandes@climateriskhorizons.com> +1 857 288 9357
அபிஷேக் ராஜ், <abhishek.raj@climateriskhorizons.com> +91 62059 77748
சுந்தரராஜன்.கோ, பூவுலகின் நண்பர்கள் <info@poovulagu.org> +91 98410 31730
பிரபாகரன் வீர அரசு, பூவுலகின் நண்பர்கள் +91 73958 91230