TTV Dhinakaran: வருங்காலத்தில் ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைய அதிக வாய்ப்பு உள்ளது, ஆனால் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒருபோதும் இணைய மாட்டேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 


தமிழக அரசியல் களம் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவைச் சுற்றியே நகர்ந்துகொண்டு இருக்கிறது. இரண்டு முறை தொடர் வெற்றியைப் பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த அதிமுக, 2021 சட்ட மன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவ முக்கிய காரணமாக அமைந்தது, அதிமுகவின் உட்கட்சி மோதலும், பாஜகவுடனான கூட்டணியும்.


ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை அதிமுக பொதுக்குழு கட்சியில் இருந்து நீக்கியது. அதற்கு முன்னர் கட்சியில் இருந்துகொண்டு தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ், அவரது ஆதரவாலர்களின் மாறுபட்ட நிலைப்பாடு என அதிமுக தொடர்ந்து உட்கட்சி அரசியலில் தமிழக அர்சியல் களம் தொடர்ந்து பரபரப்பாக உள்ளது. 


அண்மையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஓபிஎஸ் இபிஎஸ்  பிரிவுகள் மற்றும் இரு பிரிவினரிடையே மோதல், சட்டப்போராட்டம் என தொடர்ந்து நடந்துகொண்டு தான் இருக்கிறது. இதற்கிடையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக்கொண்ட அதே மேடையில், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவளர்களை காட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கினார். இதற்கு எதிர்வினையாக ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். 


இதனை தொடர்ந்து, பொதுவெளியில் இருவரின் ஆதரவாளர்கள் தொடர்ந்து மோதல் போக்கினையே கடைபிடித்து வந்தனர். அதிமுகவின் ஒற்றை மக்களவை உறுப்பினரும் ஓபிஎஸ் மகனுமாகிய ரவீந்திரநாத் எம்.பி அவர்களை கட்சியி இருந்து நீக்குவதாக அறிவித்தார். இதற்கு சசிகலா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால் ஓபிஎஸ் மற்றும் சசிகலா இணைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.  


 

இந்த நிலையில்  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக குறித்து கூறியுள்ள  கருத்து அரசியல் களத்தில் இன்னும் பரபரப்பை கூட்டியுள்ளது.  டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பேட்டியளித்த டிடிவி தினகரன் எடப்பாடி பழனிச்சாமி மீது எனக்கு நம்பிக்கை இல்லை, அவர் அதிகாரத்திற்காக யாரை வேண்டுமானாலும் அழிக்க நினைப்பவர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வரும் காலத்தில் ஓ. பன்னீர்செல்வத்துடன் இணைந்து அரசியல் செய்ய வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும் ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோடு ஒருபோதும் கைகோர்க்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

 

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட முக்கிய காரணங்களில் ஒன்று அதிமுக 2021 சட்டமன்ற தேர்தலில் தென் தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெறவில்லை. இதனால் இவருக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் கட்சியில் இல்லை. உட்கட்சிக்குள் இப்படி பலத்தினை இழந்த ஓபிஎஸ்ஸை இபிஎஸ் நீக்கியபோது, கட்சிக்குள் பெரும் எதிர்ப்பு ஏற்படவில்லை. ஆனால் ஏற்கனவே ஓபிஎஸ்க்கு ஆதரவாக சசிகலா கருத்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது டிடிவி தினகரன் கூறியுள்ள ஓபிஎஸ்க்கு ஆதரவான கருத்து தென் தமிழக அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.