புதுச்சேரியின் 15வது சட்டபேரவையின் மூன்றாவது கூட்டம் இன்று காலை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் தொடங்கியது. இதற்காக சட்டமன்றத்திற்கு வந்த அவருக்கு காவலர் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்துடன் துணைநிலை ஆளுநர் தனது உரையை பேசத் தொடங்கினார். முன்னதாகவே அவைக்கு வந்த எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் 8 பேரும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். இவர்கள் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினார்கள். மேலும் ஆளுநர் உரையாற்றக் கூடாது, பாரதிய ஜனதா கட்சிக்கு அவர் வேலை செய்கிறார் என கோஷமிட்டவாறு அவர்கள் வெளிநடப்பு செய்தனர். அவைக்கு வெளியே சட்டமன்ற உறுப்பினர்கள் அமரும் இருக்கையில் முன்பு அவர்கள் கோஷமிட்டனர். அப்போது ‘மக்களாட்சி மாண்பை குறைக்காதே, ஆளுநர் பதவி கட்சி பதவியா, பதவி விலகு.. பட்ஜெட் என்னாச்சி.. மாநில அந்தஸ்து என்னாச்சி’ என்று கோஷமிட்டனர். இதனால் சட்டபேரவை 15 நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர் சிவா செய்தியார் சந்திப்பில் கூறியதாவது:- புதுச்சேரி மாநிலத்திற்கு துணை நிலை ஆளுநராக தமிழிசை செளந்தரராஜன் நியமிக்கப்பட்டபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். தமிழகத்தைச் சேர்ந்தவர், தமிழ் பேசக்கூடியவர் என்பதால் ஒன்றிய அரசிடம் புதுச்சேரி மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பார் என்று எதிர்பார்த்தோம். அதற்காக ஓராண்டு காத்துக்கொண்டிருந்தோம். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அடிக்கடி டெல்லி சென்று பிரதமர், மத்திய நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து பேசி வந்தார். அதனால் புதுச்சேரிக்கு கூடுதல் நிதி கிடைக்கும், மூடப்பட்ட மில்கள், அரசு நிறுவனங்கள் திறக்கப்படும், சம்பளம் தரப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
இதன் மூலம் துணை நிலை ஆளுநர் டெல்லிக்கு அரசியலுக்காகத்தான் சென்று பிரதமர், ஒன்றிய அமைச்சர்களை சந்தித்துள்ளார் என்பது தெரிகிறது. கடந்த ஆண்டும் இடைக்கால பட்ஜெட் போடப்பட்டது. அப்போது கொரோனா தொற்று இருந்ததால் ஏற்கலாம். ஆனால் நடப்பு ஆண்டும் இடைக்கால பட்ஜெட் போட்டதை ஏற்க முடியாது. மேலும் கடந்த மார்ச் மாதமே ஒன்றிய அரசின் புதுச்சேரிக்கான நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பது தெரிந்தும் பட்ஜெட் போடப்படவில்லை. புதுச்சேரி மாநிலத்திற்கான நிதி எவ்வளவு என்பது தெரிந்தவுடன், துணை நிலை ஆளுநர் தலைமையிலான மாநில திட்டக்குழு கூட்டத்தை கூட்டி பட்ஜெட் தொகையை இறுதி செய்து பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கலாம்.
இடைக்கால பட்ஜெட் என்பது 2 அல்லது அதிகபட்சமாக 3 மாத காலத்திற்கு போட்டிருக்கலாம். ஆனால் 5 மாத காலத்திற்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது ஒன்றிய அரசிடம் கூடுதல் நிதி கேட்கப்போவதாக கூறப்பட்டது. ஆனால் கடந்த ஜூலை 6ம் தேதிதான் துணை நிலை ஆளுநர் தலைமையில் மாநில திட்டக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அதில் எடுக்கப்பட்ட முடிவுப்படி ஒன்றிய அரசிடம் தெரிவித்து நிதியைப்பெற துணை நிலை ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் கடந்த ஒரு மாத காலமாக எடுக்கவில்லை. வருவாய் இல்லாத புதுச்சேரி மாநிலத்தில் ஒன்றிய அரசின் பங்கு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.1,874 கோடி நிதி கொடுக்கப்பட்டது. இந்த ஆண்டு அதில் இருந்து ரூ.150 கோடி குறைத்து 1,724 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்குத்தான் 5 மாதம் காத்து இருந்தீர்களா? இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி, மகாத்மாகாந்தி பல் மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி, கேவிகே உள்ளிட்ட சொசைட்டி கல்லூரிகளுக்கு மட்டுமே கடந்த 10 ஆண்டுகளாக ரூ.3,800 கோடி ஒன்றிய அரசு நிதி தரவேண்டியுள்ளது. ஒன்றிய அரசு ஜிஎஸ்டி தொகையில் 41 சதவீதம் தர வேண்டும். ஆனால் 23 சதவீதம் மட்டுமே தருகின்றது. அதுவும் கூட இந்த ஆண்டு ரூ.1300 கோடி கிடையாது. துண்டு விழுவதால் புதியதாக வரி போடப்போகின்றீர்களா, அல்லது மக்களுக்கான நலத்திட்டங்கள் எதையும் நிறுத்தப்போகின்றீர்களா என்று மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
முதல்வர் பிரதமரை சந்தித்தால் நிதி கிடைக்கும் என்று கூறினீர்கள். தற்போது முதல்வரும் பிரதமரை சந்தித்து பேசி, கூடுதல் நிதி கேட்டும், மாநில அந்தஸ்து கேட்டும் மனு அளித்துவிட்டு வந்துள்ளார். பிரதமரை முதல்வர் சந்தித்த பின்னர் புதுச்சேரிக்கு எவ்வளவு நிதி கூடுதலாக தரப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஒன்றிய அரசின் வேண்டப்படாத ஆட்சி நடைபெறவில்லை. அமைச்சரவையில் பாஜக பங்கேற்று கூட்டணி வகிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் நடைபெறுகிறது. ஆனாலும் எதுவும் கிடைக்கவில்லை. முழுமையாக பாஜக ஆட்சி நடைபெற வேண்டும் என்று நினைக்கின்றது. இதனால் அவர்கள் கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுத்துறைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளது. இதை நிரப்புவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பட்ஜெட் என்பது மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு, தொடங்குவதுதான். ஆனால் இந்த அரசு சம்பளம் போடுவதற்கான நிதியை பெற அனுமதி பெறுவதற்காக மட்டுமே கூட்டுகின்றது. அரசின் இதுபோன்ற செயல்களை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம் என கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்