கடந்த சட்டமன்ற தேர்தலின் போது டெல்டா மாவட்டங்கள் உள்பட பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி அமோக வெற்றிபெற்றது. ஆனால், திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக இருந்த கொங்கு மண்டலத்தை கைப்பற்ற வகுத்த பல்வேறு வியூகங்களை உடைத்து கிட்டத்தட்ட மொத்த தொகுதிகளையும் அதிமுக கூட்டணி வாரி சுருட்டியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் சூறாவளியாய் சுற்றி அப்பகுதிகளில் பிரசாரம் செய்தனர். ஆனாலும், தேர்தல் முடிவின் போது திமுகவால் அங்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இப்போதும் திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறது கொங்கு மண்டலம். வெற்றி பெற்று ஆட்சியமைத்ததும் செய்த முதல் வேலை கொங்கு பக்கம் திமுக தலைமை கவனத்தை செலுத்தியது தான். அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை தோற்கடித்ததோடு, கரூரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் செந்தில்பாலாஜியை கொங்கு மண்டல பொறுப்பாளராக நியமித்தது.

Continues below advertisement

சட்டமன்றத்தேர்தலில் விட்டதை உள்ளாட்சித் தேர்தலில் பிடிக்கும் முனைப்பில் இருக்கிறது திமுக. அதற்கான வேலைகளை கொங்கு பகுதியில் முடுக்கி விட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக உதயநிதி ஸ்டாலினை அழைத்து பேச வைக்க ஏற்பாடு செய்திருந்தார். நேற்று மாலை கொடிசியா மைதானத்தில் ஒருங்கிணைந்த கோவை பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தான் உதயநிதி கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த கூட்டம் தான் தற்போது எதிர்கட்சியினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. கடந்த டிசம்பர் 24ம் தேதி எம்ஜிஆர் நினைவு தினத்தை விமரிசையாக கொண்டாடுவதற்கு எதிர்கட்சிகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமி, ஓபன்னீர்செல்வம் ஆகியோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அதே போல அமமுக சார்பிலும் அஞ்சலி செலுத்த அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா  பரவலை காரணம் காட்டி அவர்களுக்கு அனுமதி மறுத்தது காவல்துறை. இதனால் எம்ஜிஆர் நினைவஞ்சலி அமமுக அலுவலகத்திலேயே நடத்தப்பட்டது.

Continues below advertisement

 

இந்த நிலையில் தான், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற கூட்டம் அமமுக தரப்பை கடுப்பேற்றியிருக்கிறது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால்  ஓமிக்ரான்  பரவும் என்று தடைபோட்ட ஸ்டாலினின் காவல்துறை, உதயநிதி ஸ்டாலினுக்காக  கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா? ஒருவேளை தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் மட்டும்தான் ஓமிக்ரான்  பரவும் என்று  தி.மு.க அரசுக்கு உலகமகா நிபுணர்கள் யாராவது  சொல்லி இருப்பார்களோ? இவர்களுக்கு மனசாட்சியும் கிடையாது ; மக்களைப் பற்றி கவலையும்  கிடையாது! 'தீய சக்தி கூட்டம்' என்று தெரியாமலா சொன்னார்கள் நம் தலைவர்கள்? என்று டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது, பொதுக்கூட்டங்கள் நடத்ததான் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அரங்குகளில் கூட்டம் நடத்த எந்த தடையும் இல்லை. உதயநிதி பங்கேற்றது உள்ளரங்கு கூட்டம் தான் அங்கே கொரோனா விதிகள் எதுவும் மீறப்படவில்லை என்று பதிலளித்தார்.

அமைச்சரின் இந்த பதிலுக்கு எதிர்வினையாக டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கோவையில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் கொரோனா விதிமுறைகள் மீறப்படவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கமளித்திருக்கிறார். கொடிசியா உள் அரங்கில் தி.மு.க நிகழ்ச்சி நடத்தியதாக அவர் கூறுவது முழுப்பூசணிக்காஅயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது.

 

25,000 பேர் கல்ந்து கொண்டதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களையோ காணொளிகளையோ பார்க்கும் பச்சைக்குழந்தைக்குக் கூட இந்த நிகழ்ச்சி உள்ளரங்கில் நடந்ததா? அல்லது மைதானத்தில் நடந்ததா? என்பது புரியும். அதில் குறைந்த பட்சம் எத்தனை பேர் முகக்கவசம் அணிந்திருக்கிறார்கள்? சமூக இடைவெளியுடன் அமர்ந்திருக்கிறார்கள்? ஒமிக்ரான் பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருவதால் மத்திய அரசின் குழுவும் தமிழகத்திற்கு வந்துள்ள இந்த வேளையில் திமுக பாக முகவர்களை ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் ஒன்று திரட்ட வேண்டிய அவசியம் என்ன? தங்களது சொந்த கட்சியினரும், அவர்கள் வழியாக பொதுமக்களுக்கும் நோய்ப்பரவலை ஏற்படுத்த கட்டுப்பாடுகளை விதிக்கும் இவர்களே காரணமாக இருக்கலாமா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

ஓமிக்ரான் பரவல் அதிகரிப்பதை காட்டி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நினைவிடத்தில் நாங்கள் அஞ்சலி செலுத்த காவல்துறை தடைவிதித்த போது சமூக பொறுப்புமிக்க ஓர் அரசியல் இயக்கமாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் அதனையேற்று செயல்பட்டது.

ஆனால், கோவை நிகழ்ச்சிக்கு திமுகவினருக்கு காவல்துறை முறைப்படி அனுமதி வழங்கினார்களா? அப்படி காவல்துறை பாரபட்சத்துடன் அனுமதி கொடுத்திருந்தால் இனிவரும் காலங்களில் மக்கள் நலப்பிரச்சனைகளுக்காக உரிய கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளோடு நாங்கள் போராட்டம் நடத்தும்போது காவல்துறையினர் அனுமதி தர மறுத்தால் கோவை நிகழ்ச்சியை ஆதாரமாகக் காட்டி நாங்கள் நீதிமன்றத்திற்குச் செல்லவேண்டியிருக்கும் என்று அந்த அறிக்கையில் டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.